📅 Tuesday, 25 August 2026 IST | ஆவணி 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 25, 2026 12:03 AM

“பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடுவது தமிழக வளர்ச்சிக்கு மிகப் பெரிய அடி”

“பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடுவது தமிழக வளர்ச்சிக்கு மிகப் பெரிய அடி”

திமுக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்குக் காரணம் துரிதமான திட்டமிடல், சரியான திட்டமிடல், துரிதமான கிளியரன்ஸ். அதைத் தாண்டி சாலைகள், துறைமுகம், விமான நிலையம் உள்ளிட்ட சரியான நேரத்தில் முடிவெடுக்கப்பட்டு, திட்டங்கள் வகுக்கப்பட்டன.

அதில் முக்கியமான ஒரு திட்டம் போர்ட் கனெக்டிவிட்டி. கப்பல் போக்குவரத்தும் சரி, விமானப் போக்குவரத்தும் சரி, தரைவழிப் போக்குவரத்தும் சரி, அனைத்தும் சரியாக இருந்தால்தான் இங்கு தயாரிக்கப்படும் இந்த பொருட்கள் எல்லாமே சரியான நேரத்தில், உரிய நேரத்தில் போர்ட் சென்றடையும்; அதன் மூலம் அது உலகம் எங்கும் அது சென்றடையும்.

இன்றைய நாள் தமிழகத்துக்கு ஒரு மிகப் பெரிய கருப்பு நாள் என்றுதான் நாம் சொல்ல வேண்டும். தொழில் வளர்ச்சிக்கும், உட்கட்டமைப்பு வசதிகளிலும் ஒரு மிகப்பெரிய பின்னடைவை சந்தித்த நாள் இன்று (ஆக.24) என்று வரலாறு சொல்லும் அளவிற்கு, நீண்ட காலம், மிகச் சரியான முறையில் பல இடங்களைப் பார்த்து, பொருளாதார வல்லுனர்கள், தொழில்நுட்ப வல்லுனர்களிடம் கேட்டு, பிறகு தேர்வு செய்யப்பட்ட பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை இன்று தவெக அரசு கைவிட்டுள்ளது.

இது ஒரு விமான நிலையத்தை மட்டும் கைவிட்ட மாதிரி எனக்குத் தெரியவில்லை. ஒட்டுமொத்த தமிழகத்தின் வளர்ச்சிக்கு ஒரு மிகப் பெரிய அடி.

பரந்தூர் விமான நிலைய திட்டம் ஏன் தேவை?

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இன்னைக்கு கெப்பாசிட்டி ஆண்டுக்கு 35 மில்லியன். ஒரு வருடத்திற்கு 35 மில்லியன். கிட்டத்தட்ட 3.5 கோடி. பயணிகள் போகும் அளவுக்கு தான் இருக்கு. இதில் இன்னைக்கு நம்ம முதல்வர் சொன்னது போல, அது 20 மில்லியன் கூடுதலாக வரப்போகுது, டெர்மினல்-5 ஐ வரப்போகுதுன்னெல்லாம் சொல்றார்.

ஆனா, தமிழகத்தை நாங்கள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் நோக்கி தமிழகத்தை செலுத்திக் கொண்டிருந்த முன்னாள் முதல்வர் ஸ்டாலின், தொலைநோக்குச் சிந்தனையுடன் 2045, 2050 என்று நமது திட்டமிடல் இருந்தது. புதிய விமான நிலையம் வந்துச்சுன்னா குறைந்தபட்சம் 20 ஆண்டுகளுக்கு அது போதுமானதாக இருக்க வேண்டும்.

மீனம்பாக்கம் விமான நிலையத்தை இந்திய விமான நிலைய ஆணையம் பராமரித்து, இயக்கி வருகிறது. அது நம்முடையது கிடையாது. நமது அரசாங்கத்துக்கு இது கிடையாது. நமக்கு அங்கு பெரிய கட்டுப்பாடு எதுவும் கிடையாது.

ஆனால், பரந்தூரில் புதிய விமான நிலையம் வந்திருந்தால், அது முழுமையாக நமது கட்டுப்பாட்டில் இருந்திருக்கும். அது நமது சொத்து. ஒட்டுமொத்தமாக தமிழக அரசின் சொத்தாக இருந்திருக்கும். அது பொது தனியார் கூட்டாண்மையில் (PPP) செயல்பாட்டுக்கு வந்திருக்கும். நாட்டின் முன்னணி தனியார் நிறுவனம் தொடங்கி பன்னாட்டு நிறுவனங்கள் வரை அதற்கு ஆர்வம் காட்டின.

அண்டை மாநிலத்து முதலமைச்சருக்கு (சந்திரபாபு நாயுடு) இருக்கும் அக்கறைகூட இன்று ஆட்சியில் இருப்பவர்களுக்கு இல்லை என்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. ஒரு வார்த்தை சொல்லிவிட்டோம் என்பதற்காக நீங்கள் இன்று “டிராப் செய்றேன்”னு சொல்றீங்க.

இன்னைக்கு முதலமைச்சர் கொடுத்த அறிவிப்பில், நான் அங்கே போயிருந்தேன், போராட்டக் குழுவை சந்தித்தேன், அவர்களிடம் நான் உறுதி அளித்தேன். நான் வந்துட்டேன்னு சொல்றாங்க. நீங்க ஒரு வாட்டி போனீங்க. ஒரு வாட்டி பார்த்தீங்க, பேசினீங்க. சரி. அதுல முடிவு பண்ணிட்டேன்னு எப்படி உங்களால சொல்ல முடியும்னு எனக்குத் தெரியல.

தொடர்ந்து இன்று காலை முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு சொல்லியது போல, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் தொடர்ந்து அத்தனை முறை அங்கே அந்த மக்கள்கிட்ட பேச்சுவார்த்தை நடத்தி இருக்காங்க.

பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, அங்கே அவர்களுக்கு நஷ்டஈடு கொடுக்கப்பட்டு, தேவையான நிதி ஒதுக்கப்பட்டு, தேவையான வீடுகளும் வாங்கி இருக்கோம். பல இடங்களில் அதற்கு மாதிரி வீடுகளும் கட்டிக் காட்டியாச்சு.

ஒட்டுமொத்த கிராமத்தையே மீண்டும் உருவாக்கம் செய்தோம். அப்படி இவ்வளவு இவ்வளவு கஷ்டப்பட்டு திட்டமிடல் ஏன்?

ஏனென்றால் சென்னையின் அமைப்பு மற்றும் அதன் தொழில் துறை அமைப்பு சார்ந்து பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது. இதில் பல பேரின் உழைப்பு உள்ளது. மத்திய அரசிடம் போராடி இதற்கான அனுமதியை பெற்றோம். அது சுற்றுச்சூழல் சார்ந்த அனுமதி உட்பட அனைத்தும் அடங்கும்.

வேற இடம் எடுக்கறேன்னு சொல்றாரே, இன்னைக்கு நீர்நிலைகள் எல்லாம் எடுக்க முடியுமா? இவர் புதுசா எடுக்கப் போற அந்த இடத்தில் எந்த ஒரு சுற்றுச்சூழல் பாதிப்பும் இல்லாமல் இருந்துவிடுமா?

இதனால் பல லட்சம் பேருக்கு, கோடிக்கணக்கான மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு, பெண்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய இந்தத் துறையில் உங்கள் அரசியலைப் புகுத்தாதீர்கள்.

நீங்கள் இன்று அரசியல் செய்ய நினைத்து, இன்று தமிழகத்துக்கு மிகப் பெரிய கேடை இங்கே கொண்டு வந்து சேர்த்திருக்கிறீர்கள். தயவு செய்து இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இந்த திட்டத்துக்காக 90% நிலம் எடுப்பு முடிச்சாச்சு. இப்ப எடுத்த நிலத்தை என்ன பண்ணீங்க? திருப்பிக் குடுத்துருவீங்களா எல்லாருக்குமே? இந்த நிலத்த வேற விஷயத்துக்கு பயன்படுத்த பண்ண முடியாது. நிலம் கையகப்படுத்தல் சட்டம் என்ன சொல்லுது? எந்தத் திட்டத்தை எந்த விஷயத்துக்காக எடுத்துக்கணும், அதுக்காக பயன்படுத்தவில்லை என்றால் திருப்பிக் கொடுத்துரணும். ரைட்டா?

சரி, நீங்க அதுக்கு வேற ஏதாவது திட்டங்கள் வச்சிருந்தா கூட, அந்தத் திட்டங்கள் என்ன திட்டங்கள்? அந்தத் திட்டங்கள் வரும்போது இதே மாதிரி சுற்றுச்சூழல் பாதிப்பு வராதா?

அப்ப இன்னைக்கு வந்து, “இல்ல, அத நான் வேற திட்டம் கொண்டு வரேனா?” அதுல என்ன பண்ணப் போறீங்க? முதல்ல இப்படி கொண்டு வரலாமா? இதுல சட்டத்துல விதி இருக்கா? அதெல்லாம் பேசி பார்த்தீங்களா?

இப்படி சிந்தனையே இல்லாம, தொலைநோக்குப் பார்வை இல்லாம பரந்தூரைக் கைவிட்டது மிக மிக மிக தவறான ஒரு செயல். இதன் மூலம் மிகப்பெரிய ஒரு பழியை நீங்களே சுமத்திக் கொண்டிருக்கிறீர்கள்.

இது பெரிய தவறு. இதை கைவிடாமல், நாட்டுக்கும் மக்களுக்கும், தொழில் வளர்ச்சிக்கும், தமிழகத்துக்கும், தொழில் வளர்ச்சிக்கும் நன்று. நிச்சயமாக இதை முதல்வர் மறுபரிசீலனையை முதல்வர் செய்ய வேண்டும்.

இந்த இடம் குறைந்த பாதிப்புகளை ஏற்படுத்தும் இடம். இதைவிடுத்து வேறு எங்க போனாலும் அதிகமான மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை பொறுத்தவரைக்கும், ஒவ்வொரு பயணி அங்கே பறக்கும் போதும் தமிழக அரசாங்கத்துக்கு வருமானம் வரும். அதை அந்த பயணிகள் கொடுப்பாங்க. இப்ப இந்திய விமான நிலைய ஆணையத்துக்கு கொடுத்து என்ன வருமானம் உங்களுக்கு வரப்போகுது?

உங்களுக்கு கனெக்டிவிட்டி இல்லாம? எப்படி சார் ஒன்றரை ட்ரில்லியன் பொருளாதாரத்தை எட்ட முடியும்?” என்று தெரிவித்தார்.