தூய்மைப் பணியாளர்களை தவெக அரசு கருணையுடன் அணுக வேண்டும்: நயினார் நாகேந்திரன்
தூய்மைப் பணியாளர்களை தவெக அரசு கருணையுடன் அணுக வேண்டும்: நயினார் நாகேந்திரன்
சென்னை: தூய்மைப் பணியாளர்களை தவெக அரசு கருணையுடன் அணுக வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ஊதிய உயர்வு, மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில் போராடிய தூய்மை பணியாளர்களுக்கும், காவலர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதும், இதனால் பல தூய்மைப் பணியாளர்கள் சாலையில் படுத்து போராடியதும் வருத்தமளிக்கிறது.
போதிய பாதுகாப்பு உபகரணங்களை அரசு வழங்கவில்லை என்றாலும் கூட, மழை, வெயில், குளிர் என எதையும் பெரிது படுத்தாமல், நமது சுற்றப்புறத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் பெரும் பங்கு வகிக்கும் தூய்மைப் பணியாளர்களை, சற்று கருணையுடன் அணுக வேண்டும்.
கடந்த சில தினங்களாக தொடரும் இந்தப் போராட்டத்தின் ஆணி வேர் என்ன என்பதை உடனடியாக கண்டறிந்து, தூய்மைப் பணியாளர்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி, இப்போராட்டம் சுமூகமாக முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். போராடும் தூய்மைப் பணியாளர்கள் மீது காவலர்களின் துணையுடன் கண்மூடித்தனமான அடக்குமுறையை ஏவும் அராஜகப் போக்கை தவெக அரசு மேற்கொள்ளக் கூடாது என முதல்வர் விஜய் அவர்களை கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.