📅 Tuesday, 18 August 2026 IST | ஆவணி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil May 28, 2026 12:32 AM

பயணிகளால் கள்ளக்கடத்தலில் சிக்கும் அபாயம்; மலேசிய டாக்சி ஓட்டுநர்கள் கவலை

பயணிகளால் கள்ளக்கடத்தலில் சிக்கும் அபாயம்; மலேசிய டாக்சி ஓட்டுநர்கள் கவலை

ஜோகூர் பாரு: மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு டாக்சி மூலம் எல்லை கடக்கும்போது பயணிகள் வரி செலுத்தப்படாத பொருள்களைக் கடத்துவது அதிகரித்துள்ளதால், மலேசிய டாக்சி ஓட்டுநர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

பயணிகளின் உடைமைகளைச் சோதனையிட ஓட்டுநர்களுக்குச் சட்டப்படி அதிகாரம் இல்லை. இதனால், சோதனைச்சாவடிகளில் வரி செலுத்தப்படாத பொருள்கள் அகப்படும்போது தாங்கள் நிராதரவாக உணர்வதாகவும் தாங்கள் ஏமாற்றப்படுவதாகவும் ஓட்டுநர்கள் தெரிவித்தனர்.

தாங்கள் குற்றமற்றவர்கள் எனத் தெரிந்து பின்னர் விடுவிக்கப்பட்டாலும், விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்படுவதால் தங்களுக்கு வருமான இழப்பு ஏற்படுவதாகவும் வாடகை மற்றும் இதர செலவுகளைச் சமாளிக்க முடியாமல் தவிப்பதாகவும் அவர்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.

உதாரணத்துக்கு, கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி 70 வயது மலேசிய ஓட்டுநர் ஓட்டிவந்த காரில் 26 பொட்டலங்கள் அடங்கிய வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளும் 40 மின்சிகரெட்டுகளும் குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணைய அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டன. இதுதொடர்பாக காரில் இருந்த 28 வயது சிங்கப்பூர் பயணி கைது செய்யப்பட்ட நிலையில், ஓட்டுநர் பின்னர் விடுவிக்கப்பட்டார்.

பயணிகளிடம் வரி செலுத்தப்படாத பொருள்கள் பற்றி முன்னெச்சரிக்கை செய்தாலும் அவர்கள் உண்மையைக் கூறுவதில்லை என்பதால், இறுதியில் ஓட்டுநர்களே ஆபத்தைச் சந்திக்க வேண்டியுள்ளது என்று ஜோகூர் பாரு-சிங்கப்பூர் வாடகை வாகனங்கள் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் சங்கத்தின் தலைவர் முகம்மது சுஹைமி சைடி கூறினார்.

ஓட்டுநர்களைப் பாதுகாக்க, ஜோகூரின் லார்க்கின் முனையத்தில் பயணிகளின் உடைமைகளைச் சோதனையிடும் கருவிகளைப் பொருத்தவோ அதிகாரிகளை நியமிக்கவோ மலேசிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.