📅 Saturday, 01 August 2026 IST | ஆடி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion July 31, 2026 04:33 PM

பழநி கோவில் நில மோசடி வழக்கு; ஆய்வு செய்ய 6 பேர் கொண்ட சிறப்பு குழு அமைப்பு

பழநி கோவில் நில மோசடி வழக்கு; ஆய்வு செய்ய 6 பேர் கொண்ட சிறப்பு குழு அமைப்பு

நமது நிருபர்

பழநி அடிவாரம் பூங்கா ரோட்டில் தண்டபாணி சுவாமி மடத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பு நிலம் ஜூலை 6ல் நீதிமன்ற உத்தரவை மீறி போலி ஆவணங்கள் மூலம் தனிநபர்களுக்கு ரூ.2 கோடிக்கு மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து கோயில் நிலங்கள் கண்காணிப்பாளர் முருகானந்தம் சி.பி.சி.ஐ.டி., போலீசில் ஜூலை 15ல் புகார் அளித்தார்.

அதன்பேரில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், அறக்கட்டளை நிர்வாகி உட்பட மேலும் சிலர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து விசாரணை நடந்தது. இந்தவழக்கில் அறக்கட்டளை நிர்வாகி உட்பட நால்வரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர். ஆக.,12 வரை அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க திண்டுக்கல் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டு இருக்கிறார்.

தற்போது சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் பதிவு செய்த அனைத்து நிலங்களின் ஆவணங்களையும் ஆய்வு செய்ய 6 பேர் கொண்ட சிறப்பு குழுவை பத்திரப்பதிவு துறை அமைத்தது. ஜஸ்டின் மணிகண்டன் சார் பதிவாளராக பொறுப்பேற்ற நாள் முதல் உள்ள ஆவணங்களை சிறப்பு தணிக்கை செய்து அறிக்கையினை 3 நாட்களுக்குள் சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.