ராகுல் காந்தி Vs விஜய்
ராகுல் காந்தி Vs விஜய் - யார் பிரதமர் வேட்பாளர்?
"தவெக அமைச்சர்கள் இன்னும் ரசிகர் மன்ற மனநிலையிலேயே பேசிக் கொண்டிருக்கிறார்கள்" என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
Published : August 26, 2026 at 9:00 AM IST
By மகேந்திரன்
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் முழுமையாக 2 ஆண்டுகள் உள்ளன. ஆனால், அதற்குள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பிரதமர் வேட்பாளர் என்ற முழக்கம் ஒலிக்கத் தொடங்கிவிட்டது. அந்த முழகத்தை தொடங்கி வைத்திருப்பவர்கள் தமிழக வெற்றிக் கழகம் கட்சியினர்.
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப் பேரவை தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 108 இடங்களில் வென்ற தமிழக வெற்றிக் கழகம், 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆட்சியமைக்க தேவையான போதுமான உறுப்பினர்கள் இல்லாத நிலையில், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சியமைத்தது.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றார்.
தமிழ்நாட்டில் கட்சித் தொடங்கிய இரண்டரை ஆண்டுகளில் ஆட்சியை கைப்பற்றி வரலாற்று சாதனையை அவர் படைத்துள்ளார். அதற்கு காரணம், தனது திரையுலகப் பயணம் வழியாக 30 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் உள்ள இல்லங்களுக்கு சென்று விட்டார். அதனால் பச்சிளம் குழந்தை முதல் முதியவர் வரை அனைவருக்கும் விஜய் என்று ஒருவரை அறிமுகம் செய்யத் தேவையில்லை. மேலும் திரையுலகில் உச்சத்தில் இருக்கும்போதே, இதுவரை எந்தவொரு நடிகரும் செய்யாததை அவர் செய்தார். இதுதான் என் கடைசி திரைப்படம் என்று அறிவித்து விட்டு, தனது கையெழுத்துடன் திரையுலக கதவை மூடிவிட்டு அரசியல் களத்திற்குள் நுழைந்துள்ளார்.
விஜய் ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்களே முடிந்துள்ள நிலையில், அவரை தேசியத் தலைவராக முன்னிறுத்தி, அவரை பிரதமர் வேட்பாளர் என்று தவெக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பேசத் தொடங்கி விட்டனர்.
தமிழ்நாட்டில் இதற்கு முன்பு ஆட்சி செய்த முதலமைச்சர்கள், தங்களின் உயரம் இதுதான் என்று தீர்மானித்து மாநில அரசியலிலேயே கவனம் செலுத்தினர். ஆனால், முதலமைச்சர் விஜய்யை பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தி அக்கட்சியினர் பேசத் தொடங்கி விட்டனர். ஏனென்றால், விஜய் ஒரு திரைநட்சத்திரம் என்பதால் அவரை இந்திய அளவில் புதிதாக அறிமுகம் செய்யத் தேவையில்லை என்று தவெகவினர் கருதுகிறார்கள். இதனால் அவர்கள் வெளிப்படையாக தங்கள் விருப்பத்தை தெரிவிக்கத் தொடங்கி விட்டனர்.
குறிப்பாக, திருப்பூரில் நடைபெற்ற தவெக-வின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக் கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், "நான் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருடன் பயணித்துள்ளேன். இவ்விரு தலைவர்களுக்குப் பிறகு, அவர்களின் வழியில் தமிழ்நாட்டை மட்டுமல்ல, எதிர்கால இந்தியாவையே ஆளுகிற சக்திதான் விஜய்" என்று குறிப்பிட்டார். அத்துடன் நிறுத்தால், "வட மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் கூட விஜய்யைப் போன்ற ஒரு தலைவர் தங்களுக்குக் கிடைக்க மாட்டாரா என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்" என்றும் அவர் கூறினார்
இதேபோன்று, சிவகாசி மற்றும் விருதுநகரில் நடைபெற்ற தவெக சாதனை விளக்கக் கூட்டங்களில் பேசிய அமைச்சர் ஜெகதீஸ்வரி, "அரசியலில் தூய்மையான, ஊழலற்ற ஆட்சியைத் தந்து கொண்டிருக்கும் இன்றைய முதலமைச்சர் விஜய், வருங்காலத்தின் பிரதமர் . நமது ஒவ்வொரு வினாடி பயணமும் அதை நோக்கியே இருக்க வேண்டும்" என்றார்.
அமைச்சர் மரிய வில்சனும், "முதலமைச்சர் விஜய் தற்போது தேசிய அளவிலான மாற்றுத் தலைவராக உருவெடுத்து வருகிறார்" என்றார். அமைச்சர் ஸ்ரீநாத்தும், "தற்போது ஒட்டுமொத்த இந்தியாவும் நமது தலைவரைப் பற்றித்தான் பேசுகிறது. மிக விரைவில் அவர் டெல்லியைக் கைப்பற்றுவார் (பிரதமராவார்)" என்று நம்பிக்கை தெரிவித்தார். இவை அனைத்தும் தவெக அமைச்சர்கள் சட்டமன்றத்துக்கு வெளியே பேசியவை.
ஆனால், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, சட்டமன்றத்துக்கு உள்ளேயே தனது விருப்பத்தை தெரிவித்தார். அதாவது, "இந்தியாவின் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் தகுதி, தென் மாநிலங்களுக்கு உண்டு; தென் மாநிலங்களில் இரு்ந்து ஒரு பிரதமர் தேர்வு செய்யப்பட வேண்டும்" என்ற கோரிக்கையை அவைக்குள் பகிரங்கமாக முழங்கினார்.
இவ்வாறு விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி பேசுவது, கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசியக் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கெனவே, இந்தியாவில் நேரு காலம் தொடங்கி மன்மோகன் சிங் காலம் வரை பல ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, தங்கள் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்னிறுத்தி பாடுபட்டு வருகிறது.
2014இல் ஆட்சியை இழந்த காங்கிரஸ் கூட்டணி, 2029-க்கு காத்திருக்கிறார்கள். இதற்கிடையே, விஜயை பிரதமராக முன்னிறுத்துவதால் காங்கிரஸ் அதிருப்தியில் உள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், "தவெக அமைச்சர்கள் இன்னும் ரசிகர் மன்ற மனநிலையிலேயே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இன்னும் அரசியல் தலைவர்களாகப் பக்குவமடையவில்லை" என்று தெரிவித்தார்.
தவெக ஏன் இன்னும் 'இந்தியா' கூட்டணியில் சேர்க்கப்படவில்லை என்ற கேள்விக்கு, "தற்போது தவெகவிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் இல்லை. வரும் 2029 மக்களவைத் தேர்தலில் தவெக போட்டியிட்டு எப்போது எம்.பி.க்களைப் பெறுகிறதோ, அப்போது அவர்களை இந்தியா கூட்டணியில் இணைத்துக் கொள்ள அழைப்போம்; எம்.பி.க்களே இல்லாத ஒரு கட்சியை எப்படிக் கூட்டணியில் சேர்க்க முடியும்?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து மாணிக்கம் தாகூர் மேலும் பேசுகையில், "தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு விஜய்க்கு பெரும்பான்மை கிடைக்காத போது, அவர் முதலமைச்சராவதற்கு முதலில் ஆதரவுக் கடிதம் கொடுத்ததே காங்கிரஸ் கட்சி தான் என்பதை தவெக அமைச்சர்கள் மறந்துவிடக் கூடாது.
அன்று, காங்கிரஸ் மட்டும் ஆதரவு கொடுக்கவில்லை என்றால், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்நேரம் தவெக ஆட்சியமைக்க விடாமல் தடுத்து, கட்சியை உடைத்து, எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கியிருப்பார்" என்றும் அதிரடியாக தெரிவித்தார்.
"இறுதியாக, 2029 மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை 'இந்தியா' கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி மட்டுமே இருப்பார்" என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
இந்நிலையில், 'பிரதமர் வேட்பாளர்' உரசல் குறித்து நடிகையும் பாஜக பிரமுகருமான கஸ்தூரி, தவெக-காங்கிரஸ் கூட்டணி உடைந்து விடும் என அதிரடி கருத்தை தெரிவித்துள்ளார். அதாவது, வரவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் தவெக தனித்து நின்று வெற்றி பெற்றால், தற்போதைய காங்கிரஸ் உடனான தவெகவின் கூட்டணி உடைந்துவிடும் என்று கணித்துள்ளார்.
எனவே, விஜய் பிரதமர் பதவி வேட்பாளர் ஆவாரா என்பதும், தவெக-காங்கிரஸ் கூட்டணி தொடருமா என்பதும் இரு தரப்பின் அடுத்த நகர்வுகள் தீர்மானிக்கும்.