ரோஹித் சர்மாவின் எதிர்காலம்... ஊகங்களுக்கு ‘தீனி போட' விரும்பவில்லை: பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா அதிரடி
மும்பை: ரோஹித் சர்மா மிகச் சிறப்பாக விளையாடி வருவதாகவும் இதனால் அவரது எதிர்காலம் குறித்த ஊகங்களுக்கு ‘தீனி போட’ விரும்பவில்லை என பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் சமீபகால செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் டெஸ்ட், ஒருநாள் போட்டி அணியின் கேப்டன் ஷுப்மன் கில், டி 20 கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர், தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர், பெங்களூரு பிசிசிஐ உயர்திறன் செயல் மையத்தின் இயக்குநர் விவிஎஸ் லக் ஷ்மன் மற்றும் பிசிசிஐ உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதேவேளையில் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர், இந்த ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
கூட்டத்துக்கு பின்னர் பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா கூறும்போது, “ரோஹித் சர்மா அனைத்து ஆட்டங்களிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். இதற்கு மேல் வேறு என்ன வேண்டும்? கடந்த போட்டியில் (இங்கிலாந்துக்கு எதிராக) கூட ரோஹித் சர்மா 138 ரன்கள் விளாசினார், பிறகு எதற்காக அவரது எதிர்காலம் குறித்து ஊகங்கள் எழுகின்றன. ஊகம் பரப்புபவர்களுக்குத் தீனி போட நான் விரும்பவில்லை.
தேர்வுக்குழு தலைவரான அஜித் அகர்கர், வெளியூரில் இருப்பதால் அவரால் ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை. இந்த கூட்டம் மிகக் குறுகிய கால அவகாசத்தில் அவசரமாகக் கூட்டப்பட்டது. அஜித் அகர்கர் இருக்கும் பகுதியில் இணைய வசதி சரியில்லாததால் ஆன்லைன் மூலமாகவும் அவரால் இணைய முடியவில்லை” என்றார்.
தேர்வுத் குழுத் தலைவராக அஜித் அகர்கருக்குப் பதவி நீட்டிப்பு தருவது குறித்து ஆய்வுக்கூட்டத்தில் எதுவும் பேசப்பட்டதா என்று தேவஜித் சைகியாவிடம் கேட்டதற்கு, “கூட்டத்தில் அப்படிப்பட்ட எந்த உரையாடலும் இடம்பெறவில்லை” என்று பதிலளித்தார். மேலும், பிசிசிஐ-யின் கிரிக்கெட் இயக்குநராக லக் ஷ்மண் நியமிக்கப்படுவதாக உலா வரும் வதந்திகளுக்கும் சைகியா முற்றுப்புள்ளி வைத்தார்.
இதுபோன்ற புதிய வதந்திகளுக்கு நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. நாங்கள் அப்படிப்பட்ட எந்த விவாதத்தையும் நடத்தவில்லை, அப்படிப்பட்ட எண்ணமும் எங்களிடம் இல்லை என்று அவர், உறுதியாகத் தெரிவித்தார்.