ரோகித் சர்மா கம்பேக்.. மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ரோகித் சர்மா கம்பேக்.. மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மும்பை: ஐபிஎல் வரலாற்றில் தோனிக்கு அடுத்தபடியாகவும் இணை நிலையிலும் மிக வெற்றிகரமான கேப்டனாக ரோஹித் சர்மா திகழ்கிறார். இவர் தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி 2013, 2015, 2017, 2019 மற்றும் 2020 ஆகிய ஐந்து சீசன்களில் சாம்பியன் பட்டம் வென்றது. மேலும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தொடர்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட கோப்பைகளை வென்ற இரண்டாவது இந்திய கேப்டன் என்ற பெருமையும் 39 வயதான ரோஹித் சர்மாவுக்கு உண்டு.
2013-ஆம் ஆண்டு சீசனின் பாதியில் ரிக்கி பாண்டிங் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதை அடுத்து, ரோஹித் சர்மா கேப்டனாகப் பொறுப்பேற்றார். அதே ஆண்டில் மும்பை அணிக்கு முதல் ஐபிஎல் பட்டத்தையும் சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பையையும் வென்று கொடுத்தார். கேப்டனாக 158 ஐபிஎல் போட்டிகளில் வழிநடத்தியுள்ள ரோஹித், 87 வெற்றிகளைப் பெற்றுத் தந்துள்ளார். இவரின் வெற்றி சதவீதம் 55-க்கும் அதிகமாகும்.
ரோஹித்தின் கம்பேக் குறித்து பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் நீதா அம்பானி, "2011-இல் நாங்கள் ரோஹித்தை ஏலத்தில் எடுத்தோம். அன்றிலிருந்து அவர் எங்கள் மும்பை இந்தியன்ஸ் குடும்பத்தின் ஒரு அங்கமாக மாறினார். இளம் வீரராக எங்களுடன் இணைந்த ரோஹித், ஒரு சாம்பியனாகவும், தலைவராகவும், சிறந்த குடும்பத் தலைவராகவும் வளர்ந்ததைப் பார்த்தது மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் தருகிறது" என்றார்.
இதை தொடர்ந்து பேசிய அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி "எங்களது வரலாற்றுச் சிறப்புமிக்க 20-வது சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியை ரோஹித் வழிநடத்துவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். ரோஹித் மற்றும் எங்கள் அணியின் ரசிகர்களுக்கிடையேயான பிணைப்பு மிகவும் சிறப்பு வாய்ந்தது. வரவிருக்கும் சீசன் குறித்து நாங்கள் விவாதித்தபோது, இருவருக்குள்ளும் ஒருசேர புதிய உற்சாகமும் இலக்குகளும் வெளிப்பட்டன" எனக் குறிப்பிட்டார்.
இது குறித்து பேசிய ரோஹித் சர்மா, "மும்பை இந்தியன்ஸ் என் வாழ்க்கையின் மிகப்பெரிய அங்கமாக இருந்து வருகிறது. இந்த அணியை வழிநடத்துவதை நான் எப்போதும் பெருமையாகக் கருதுகிறேன். வரவிருக்கும் சீசன் குறித்து நீதா பாபி மற்றும் ஆகாஷ் ஆகியோருடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் உற்சாகமளிப்பதாக இருந்தன. நாம் எட்டக்கூடிய இலக்குகள் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது" என்று கூறினார்.
"20-வது சீசனுக்கும், அதன் சவால்களுக்கும் நான் தயாராக உள்ளேன். எங்களது ரசிகர்களுக்குக் கொண்டாட்ட தருணங்களை வழங்க ஆவலாக இருக்கிறேன். எங்கள் பாணி கிரிக்கெட்டை விளையாடுவது, ஒன்றிணைந்து போட்டியிடுவது மற்றும் ஆட்டத்தை ரசித்து விளையாடுவதே எங்களது முக்கிய நோக்கமாக இருக்கும்" எனத் தெரிவித்தார்.