“இந்தியா உலகக்கோப்பை வெல்ல என்ன செய்யணுமோ..”.. சஞ்சு சாம்சனின் தியாகம்.. நெகிழ்ந்த சூர்யகுமார் யாதவ்
“இந்தியா உலகக்கோப்பை வெல்ல என்ன செய்யணுமோ..”.. சஞ்சு சாம்சனின் தியாகம்.. நெகிழ்ந்த சூர்யகுமார் யாதவ்
மும்பை: 2026 டி20 உலகக் கோப்பை தொடரின் போது சஞ்சு சாம்சனை அணியில் இருந்து நீக்கியது மற்றும் அவரது பெருந்தன்மையான அணுகுமுறை குறித்து அப்போதைய இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
2026 டி20 உலகக் கோப்பை தொடரின் ஆரம்ப கட்டத்தில் சஞ்சு சாம்சனை பிளேயிங் லெவனில் இருந்து நீக்க வேண்டிய கட்டாயம் சூர்யகுமாருக்கு ஏற்பட்டது. தொடக்கத்தில் இஷான் கிஷன் முன்னுரிமை பெற்றதால் சஞ்சுவுக்கு இடம் கிடைக்கவில்லை. பின்னர் அபிஷேக் சர்மா முழு உடற்தகுதியுடன் இல்லாதது மற்றும் அணியின் மந்தமான தொடக்கம் காரணமாக சஞ்சு மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார்.
இது குறித்து சூர்யகுமார் ஆகாஷ் சோப்ராவின் யூடியூப் சேனலில் பேசுகையில், "பஸ்சில் சென்று கொண்டிருந்த போது சஞ்சுவிடம் அந்த சூழ்நிலையை விளக்கி, அவரை அணியில் சேர்க்க முடியாத நிலை குறித்து கூறினேன். அதற்கு அவர், 'இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல எது சரியாக படுகிறதோ அதைச் செய்யுங்கள். எப்போது தேவைப்பட்டாலும் நான் விளையாடத் தயாராக இருப்பேன்' என்றார். அவரது இந்த சுயநலமற்ற வார்த்தைகள் எனக்கு மிகுந்த நம்பிக்கையைத் தந்தன" என்றார்.
மேலும் சூர்யகுமார் பேசுகையில், "சஞ்சுவை நீக்கியது நான் எடுத்த மிகக் கடினமான முடிவாகும். கடந்த 2024ல் இலங்கை தொடரின் போது அவர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த போது, அவருக்கு நான் நம்பிக்கை அளித்தேன். அடுத்த 7 போட்டிகளில் தொடர்ந்து அவர் டக்-அவுட் ஆனாலும், 8வது போட்டியிலும் அவரே விளையாடுவார் என்று நான் உறுதியளித்திருந்தேன். அந்த அளவுக்கு அவர் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது" என்றார்.
அதன் பின்னர் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய சஞ்சு சாம்சன், குறிப்பாக நாக்-அவுட் போட்டிகளில் சிறப்பாக விளையாடினார். 5 இன்னிங்ஸ்களில் 80.25 சராசரியுடன் 321 ரன்கள் குவித்து 2026 டி20 உலகக்கோப்பையின் தொடர்நாயகன் விருதையும் வென்றார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 199.38 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.