📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 16, 2026 02:00 PM

ரூ.500 கோடி செலவில் நீர்நிலைகள் சீரமைப்பு: அரசுடன் கைகோர்க்க பொதுமக்களுக்கு அமைச்சர் என்.ஆனந்த் அழைப்பு!

ரூ.500 கோடி செலவில் நீர்நிலைகள் சீரமைப்பு: அரசுடன் கைகோர்க்க பொதுமக்களுக்கு அமைச்சர் என்.ஆனந்த் அழைப்பு!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வருகிற அக்டோபர் மாதத்தில் தொடங்கும். ஒவ்வொரு ஆண்டும் இந்த பருவமழை காலம் சென்னை மக்களுக்கு பெரும்பாலும் சோதனை காலமாக இருக்கிறது.

முன்கூட்டியே எவ்வளவு திட்டமிட்டதாக கூறினாலும் மழை போட்டுதாக்கத்தான் செய்யும். இப்போது புதிதாக பொறுப்புக்கு வந்துள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு இந்த பருவமழை சவாலை சந்தித்து சமாளிக்க புதுமையான திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

அதன்படி, சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஏரிகள், கூவம் ஆறு மற்றும் நீர் நிலைகளை தூர்வாரும் பணிகளை தீவிரமாக தொடங்கி உள்ளது.

கிராமப்புறங்களில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், தமிழகத்தின் கிராமப்புற நீர்வளத்தைப் பாதுகாத்து மேம்படுத்தும் வகையிலும் மாபெரும் நீர்நிலை புனரமைப்புப் பணிகள் நாளை (17-ந்தேதி)தொடங்கப்பட உள்ளன.

முதலமைச்சர் விஜய் உத்தரவின்படி, வளர்ச்சியடைந்த பாரதம்- கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகள் மற்றும் நீர் வரத்துக் கால்வாய்களை புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதன்படி, மாநிலம் முழுவதும் 10,185 நீர்வரத்துக் கால்வாய்கள் மற்றும் 809 ஏரிகள், குளங்கள், ஊரணிகள் ஆகியவற்றை தூர்வாரி புனரமைக்கும் பணிகள் தொடங்க உள்ளன.

ரூ.500 கோடி மதிப்பீட்டில் வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக நீர்நிலைகளில் தேங்கியுள்ள மண், கழிவுகள் உள்ளிட்டவற்றை அகற்றி, நீர்வரத்துப் பாதைகளைச் சீரமைப்பதன் மூலம் மழைக்காலத்தில் கிடைக்கும் நீரை அதிகளவில் சேமிக்க முடியும்.

இதன் மூலம் ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளின் நீர்த்தேக்கத் திறன் அதிகரிப்பதுடன், நிலத்தடி நீர்மட்டத்தையும் உயர்த்துவதற்கான வாய்ப்பு ஏற்படும். குறிப்பாக, கிராமப்புறங்களில் விவசாயப் பாசனத்துக்கு தேவையான நீர்வளம் கிடைப்பதற்கும் இந்தப் பணிகள் பெரும் உதவியாக அமையும். மேலும் வெள்ளப் பாதிப்பையும் குறைக்கும்.

அதீத மழைப்பொழிவு ஏற்படும் நேரங்களில், நீர்வரத்துக் கால்வாய்கள் முறையாகப் பராமரிக்கப்படாமல் இருப்பது காரணமாக மழைநீர் தேங்கி விவசாய நிலங்களிலும் குடியிருப்புப் பகுதிகளிலும் வெள்ளப் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகிறது.

தற்போது மேற்கொள்ளப்படும் கால்வாய் தூர்வாரும் பணிகள் மூலம் மழைநீர் தடையின்றி நீர்நிலைகளைச் சென்றடைய வழிவகை செய்யப்படும். இதனால் மழைநீரை சேமிப்பதோடு மட்டுமின்றி, பல்வேறு பகுதிகளில் ஏற்படும் நீர்த்தேக்கம் மற்றும் வெள்ள அபாயத்தையும் குறைக்க முடியும்.

பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

தமிழகத்தின் கிராமப்புற நீர்நிலைகளைப் பாதுகாப்பது அரசின் பணியாக மட்டுமின்றி, பொது மக்களின் பங்களிப்பும் அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது. எனவே, இந்தப் புனரமைப்புப் பணிகளில் உள்ளாட்சி அமைப்புகள், ஊர் பொது மக்கள் மற்றும் தன்னார்வ லர்களின் பங்களிப்பும் இடம்பெற உள்ளது.

முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தலின்பேரில் நடைபெறும் இந்த மாபெரும் பணியில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த், அன்புடன் அழைப்பு விடுத்துள்ளார்.

கிராமப்புற நீர்வளத்தை காக்கும் நீண்டகால நடவடிக்கை மழைநீரை வீணாக கடலில் கலக்காமல் சேமித்தல், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துதல், விவசாயத்துக்கான பாசன வசதியை மேம்படுத்துதல், வெள்ளப்பாதிப்பைத் தடுப்பது என பல்வேறு நோக்கங்களை ஒருங்கிணைத்து இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

10,185 வரத்துக் கால்வாய்கள், 809 நீர்நிலைகள் என ஆயிரக்கணக்கான நீர்வள ஆதாரங்கள் ஒரே கட்டமாக புனரமைக்கப்படுவது, தமிழகத்தின் கிராமப்புற நீர்வளப் பாதுகாப்பில் முக்கியமான முன்னெடுப்பாக பார்க்கப்படுகிறது.

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக பணிகள் முன்னெடுக்கப்படு வதால், வரும் மழைக் காலத்தில் கிடைக்கும் நீரை முழுமையாகப் பயன்படுத்து வதற்கான அடித்தளமாக உருவாகும்.

மேற்கண்ட தகவலை நீர்வளத் துறை தெரிவித்து உள்ளது.