📅 Sunday, 27 September 2026 IST | புரட்டாசி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 27, 2026 02:03 PM

ஸ்குவாஷில் இந்தியாவுக்கு வெள்ளி.. ஆசிய விளையாட்டு இறுதிப்போட்டியில் அபய் சிங் வரலாற்று சாதனை

ஸ்குவாஷில் இந்தியாவுக்கு வெள்ளி.. ஆசிய விளையாட்டு இறுதிப்போட்டியில் அபய் சிங் வரலாற்று சாதனை

ஸ்குவாஷில் இந்தியாவுக்கு வெள்ளி.. ஆசிய விளையாட்டு இறுதிப்போட்டியில் அபய் சிங் வரலாற்று சாதனை

நகோயா: ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஸ்குவாஷ் களத்தில் இருந்து இந்தியாவுக்கு பெருமைமிகு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு தங்கப் பதக்கத்துக்கான இறுதி ஆட்டத்தில், இந்தியாவின் நட்சத்திர வீரர் அபய் சிங் போராடி தோல்வி அடைந்தார். அதன் மூலம் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார்.

நகோயா அரினாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில், உலகத் தரவரிசையில் 26-வது இடத்தில் உள்ள அபய் சிங், மலேசியாவின் முன்னணி வீரரான இங் இயான் யோவை எதிர்கொண்டார்.

தொடக்கத்திலிருந்தே அனல் பறந்த முதல் கேமில் இரு வீரர்களும் நீண்ட ரேலிகளில் ஈடுபட்டு மாறி மாறி புள்ளிகளைக் குவித்தனர். சுமார் 21 நிமிடங்கள் நீடித்த அந்த முதல் கேமில் அபய் சிங் 9-11 என்ற புள்ளிக் கணக்கில் நூலிழையில் நழுவவிட்டார். தொடர்ந்து மலேசிய வீரர் ஆதிக்கம் செலுத்தி தங்கப் பதக்கத்தைத் தட்டிச் செல்ல, இந்திய வீரர் அபய் சிங் வெள்ளிப் பதக்கத்துடன் தனது ஆசிய விளையாட்டுப் பயணத்தை கம்பீரமாக நிறைவு செய்தார்.

தங்கப் பதக்கம் கைநழுவினாலும், ஆசிய விளையாட்டு வரலாற்றில் சவுரவ் கோஷலுக்குப் பிறகு ஆடவர் ஒற்றையர் ஸ்குவாஷ் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய 2-வது இந்திய வீரர் என்ற மாபெரும் வரலாற்றுச் சாதனையை அபய் சிங் படைத்துள்ளார். முன்னதாக நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர் முகமது இர்பானை 3-0 என்ற நேர் செட் கணக்கில் அபய் சிங் வீழ்த்தியிருந்தார்.

ஆடவர் ஒற்றையர் ஸ்குவாஷ் பிரிவில் அபய் சிங் வென்ற இந்த வெள்ளிப் பதக்கம் இந்தியாவின் 31வது பதக்கமாக அமைந்தது.