T20 WWC: சச்சின் என்னை மீண்டும் ஜூரோவிலிருந்து தொடங்க சொன்னார்.. இந்திய வீராங்கனை ஜெமிமா கருத்து
T20 WWC: சச்சின் என்னை மீண்டும் ஜூரோவிலிருந்து தொடங்க சொன்னார்.. இந்திய வீராங்கனை ஜெமிமா கருத்து
மும்பை: கடந்த ஆண்டு நவி மும்பையில் நடைபெற்ற மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஆட்டமிழக்காமல் 127 ரன்கள் குவித்து ஜெமிமா ரோட்ரிகஸ் அசத்தினார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இன்னிங்ஸ், இந்தியா உலகக்கோப்பையை வெல்வதற்கான பாதையை அமைத்துக் கொடுத்தது. இந்த வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு மத்தியிலும், அடுத்த கட்டத்திற்குத் தயாராக இருக்க கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் அறிவுரை பெரிதும் உதவியதாக ஜெமிமா தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "சச்சின் சார் எனது பயிற்சியாளர் பிரசாந்த் ஷெட்டியிடம் பேசினார். அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய அந்த உணர்ச்சிகரமான தருணங்களைக் கடந்து வந்துவிட்டதை அவர் உணர்ந்திருந்தார். 'இன்னும் இறுதிப்போட்டி உள்ளது, அதை மறந்துவிட்டு மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்தே தொடங்கு' என்று அவரிடம் சொல்லுமாறு சச்சின் கூறியதாக" ஜியோ ஹாட்ஸ்டாருக்கு அளித்த பேட்டியில் ஜெமிமா நினைவு கூர்ந்தார்.
முந்தைய ஆட்டத்தின் வெற்றியை மறந்துவிட்டு, அடுத்த போட்டியைப் புதிய தொடக்கமாகப் பார்க்க வேண்டும் என்ற சச்சினின் இந்த அறிவுரை தனக்கு மிகுந்த தெளிவைத் தந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா கோப்பையைக் கைப்பற்றியது. அந்தப் போட்டியில் ஷஃபாலி வர்மா பேட்டிங்கில் 87 ரன்கள் எடுத்து, பந்துவீச்சில் 2/36 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆல்-ரவுண்டராக ஜொலித்தார்.
இந்த வெற்றியில் தனது பங்களிப்பை உறுதிப்படுத்த, தனது தந்தையின் உந்துதல் தனக்கு மகாசக்தியாகத் திகழ்ந்ததாக ஷஃபாலி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். "இறுதிப்போட்டிக்கு முன்னதாக இரண்டு நாட்கள் இடைவெளி இருந்தது. எனது தந்தை எனக்கு அனுப்பிய ஒரு குரல் பதிவில், 'கடினமாக உழை, களத்தில் உன் முழுத் திறமையைக் காட்டு. இந்தியா உலகக்கோப்பை வெல்ல ஷஃபாலி வர்மா முக்கியக் காரணமாக இருந்தார் என்பது வரலாற்றில் இடம்பெற வேண்டும்' என்று கூறியிருந்தார்.
அந்த குரல் பதிவு எனக்கு கூடுதல் உத்வேகத்தை அளித்தது. எனக்காக மட்டுமல்லாமல், என் தந்தை மற்றும் ஒட்டுமொத்த அணிக்காகவும் நான் களத்தில் முழுமையாகச் செயல்பட வேண்டும் என்பதை நான் உணர்ந்தேன்" என்று ஷஃபாலி கூறினார்.ஒருநாள் உலகக்கோப்பை வெற்றியைத் தொடர்ந்து, தற்போது இந்திய அணி டி20 உலகக்கோப்பை தொடருக்குத் தீவிரமாகத் தயாராகி வருகிறது. இந்தியா, ஞாயிற்றுக்கிழமை பர்மிங்காமில் நடைபெறும் தொடக்கப் போட்டியில் தனது பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.