திமுக ஆட்சியில் மின்தட்டுப்பாடே இல்லை அதிகமாக மின் கட்டணம் வசூலிப்பு ஏன்? நிர்மல்குமாருக்கு செந்தில்பாலாஜி கேள்வி
திமுக ஆட்சியில் மின்தட்டுப்பாடே இல்லை அதிகமாக மின் கட்டணம் வசூலிப்பு ஏன்? நிர்மல்குமாருக்கு செந்தில்பாலாஜி கேள்வி
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் எரிசக்தி, சட்டத்துறை உள்ளிட்ட துறை மீதான விவாதம் நேற்று நடந்தது. இதில் திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி பேசியதாவது: தற்போது மின்வாரியத்தில் அளவுக்கு அதிகமாகக் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகின்றன. தவெக அரசில் இதுவரை மின் விநியோகம் செய்வதற்கான துறை ரீதியான கூட்டமே நடத்தவில்லை. லேசான மழைக்கு சென்னையில் மின்வெட்டு ஏற்படுகிறது.
மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களில் 18 ஹார்டு டிஸ்க்குகள் காணாமல் போய்விட்டதாகவும், அதில் முக்கிய ஆவணங்கள் இருந்ததாகவும் மின்சாரத் துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். ஆனால், அவர் சொன்னது 18 ஹார்டு டிஸ்க்குகள். தற்போது கிடைத்துள்ளதாகச் சொல்வதோ 38 ஹார்டு டிஸ்க்குகள். 18 காணாமல் போய் 38 கிடைத்துள்ளது என்றால் என்ன கணக்கு என்று அவர் கேட்டார்.
மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமார்: கடந்த இரண்டு மாதங்களில் சுமார் 3,70,000 மின் இணைப்புகளுக்கு மீண்டும் மதிப்பீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சமூக வலைதளங்களில் அதிக மின்கட்டணம் வந்ததாகச் சில புகார்கள் வந்ததை தொடர்ந்து, மின்சார வாரியமே தானாக முன்வந்து கடந்த ஆண்டு மற்றும் முந்தைய ஆண்டுகளின் பயன்பாட்டுடன் ஒப்பிட்டு இந்த ஆய்வை மேற்கொண்டது.
இந்த ஆய்வின் முடிவில், வெறும் 2,719 இணைப்புகளில் மட்டுமே சிறிய அளவிலான குளறுபடிகள் இருப்பது கண்டறியப்பட்டது. அதற்கு மீட்டர் கோளாறுகளும், மனித தவறுகளால் தவறாகக் கணக்கெடுக்கப்பட்டதும் தான் காரணம். திமுக ஆட்சிக் காலத்தில் மின்சாரத் துறைக்காக 4 அமைச்சர்கள் அடுத்தடுத்து மாற்றப்பட்டனர். மேலும், கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் 99,000 டிரான்ஸ்பார்மர்கள் வாங்கப்பட்டன. தற்போதைய சூழலில் மாநிலம் முழுவதும் 593 புதிய துணை மின் நிலையங்கள் உடனடியாக அமைக்கப்பட வேண்டிய அவசியமும் தேவையும் ஏற்பட்டுள்ளது.
200 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. அதனைத் தொடர்ந்து வரும் ஆண்டுகளில், மீதமுள்ள 263 துணை மின் நிலையங்களைச் சீரான முறையில் அமைப்பதற்கான நடவடிக்கைகள் படிப்படியாக மேற்கொள்ளப்படும். (அப்போது கரூர்.... என்று அமைச்சர் கூறினார். அதற்கு திமுக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடும் அமளி ஏற்பட்டது. இரு தரப்பினரும் எழுந்து சத்தம்போட்டனர்)
உதயநிதி ஸ்டாலின்: எங்களின் சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர் மானியக் கோரிக்கைகயைப் பற்றி தெளிவாக புள்ளிவிவரங்களுடன் பேசிக்கொண்டு இருந்தார். தவறான வார்த்தைகளை முதலில் பேசியது யார் என்று உங்களுக்கு தெரியும். அவற்றையெல்லாம் நீங்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும். (தொடர்ந்து அந்த வார்த்தையை சபாநாயகர் நீக்கினார்). தொடர்ந்து அமைச்சர் நிர்மல் குமார், மேலும் ஒரு விசயம் குறித்து பேசினார். அதுவும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.