📅 Saturday, 01 August 2026 IST | ஆடி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 01, 2026 01:30 PM

தாய்மொழி விருப்பப் பாடத்திட்டம் 2027 முதல் விரிவாக்கம்

தாய்மொழி விருப்பப் பாடத்திட்டம் 2027 முதல் விரிவாக்கம்

உயர்நிலை, உயர்கல்விக்கான தமிழ் மொழி விருப்பப் பாடத்திட்டம் (Mother Tongue Language Elective Programme) 2027ஆம் ஆண்டு முதல் விரிவுபடுத்தப்படவுள்ளது.

சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) நடைபெற்ற 14வது தாய்மொழிகளின் கருத்தரங்கில் கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ இத்தகவலை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

உயர்நிலை, தொடக்கக் கல்லூரி ஆகிய இரு நிலைகளிலும் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும். தாய்மொழிக் கல்வியை வலுப்படுத்தவும் மாணவர்களிடையே தமிழ் மொழி, பண்பாடு மீதான ஆர்வத்தை ஆழப்படுத்தவும் இந்த முயற்சி எடுக்கப்படுகிறது.

தற்போது ஆண்டர்சன் சிராங்கூன், தேசியத் தொடக்கக் கல்லூரிகளிலும், காமன்வெல்த், ரிவர்சைட், ஈசூன் டவுன் ஆகிய மூன்று உயர்நிலைப் பள்ளிகளிலும் தமிழ் மொழி விருப்பப் பாடத்திட்டம் பயிற்றுவிக்கப்படுகிறது.

அடுத்த ஆண்டு முதல் உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்திலும் அது பயிற்றுவிக்கப்படும். இதன் மூலம், தங்களின் சொந்தப் பள்ளிகளில் இப்பாடத்திட்டம் இல்லாத மாணவர்களும் தமிழ் மொழி விருப்பப் பாடத்திட்டத்தைப் பயிலும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

உயர்நிலைப் பள்ளியிலிருந்து தொடக்கக் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் தடையின்றி முன்னேறுவதற்கான தெளிவான வழியையும் இந்தப் புதிய மாற்றம் அமைத்துத் தரும்.

தமிழ் மொழி, இலக்கியத் திறமையுடைய மாணவர்களைக் கண்டறிந்து அவர்களின் தேர்ச்சிக்கு வழிவகுப்பது இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும் என்று தெரிவித்தார் உமறுப் புலவர் தமிழ்மொழி நிலைய இயக்குநர் சாந்தி செல்லப்பன்.

தமிழ் இலக்கியப் படிப்பின் மூலம் மொழி மற்றும் பண்பாட்டுப் புரிதலை உருவாக்குவதில் உயர்நிலைப் பள்ளித் திட்டம் கவனம் செலுத்துகிறது.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

பல்வேறு பண்பாட்டு நடவடிக்கைகள் மூலம் இலக்கியத்தில் ஆழ்ந்த ஆர்வத்தை வளர்க்க தொடக்கக் கல்லூரித் திட்டம் முயலும்.

அத்துடன், சீன மொழி விருப்பப் பாடத்திட்டம், ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரிக்கு விரிவுபடுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அந்தப் பாடத்திட்டத்தைக் கொண்டுள்ள ஆறாவது கல்லூரியாக அது விளங்கும்.

உயர்நிலைச் சீன மொழி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஆதரவளிக்கும் ‘ஏஐஎம்எஸ்’ எனும் புதிய செயற்கை நுண்ணறிவுக் கட்டுரை திருத்தும் முறைமை வரும் செப்டம்பர் மாதத்தில் அறிமுகமாகும்.

தவிர, மலாய் மொழியைத் தாய்மொழியாகக் கொள்ளாத மாணவர்களுக்கான மலாய் மொழி சிறப்புத் திட்டம் அடுத்த ஆண்டு முதல் தேசியத் தொடக்கக் கல்லூரியில் ஐந்தாவது மையமாக விரிவாக்கப்படும்.

ஈராண்டுக்கு ஒருமுறை வழங்கப்படும் சிறந்த பாலர் பள்ளிக்கான தாய்மொழி ஆசிரியர் விருதை 16 பேர் கருத்தரங்கில் பெற்றுக்கொண்டனர்.

விருது பெற்ற ‘மை வேர்ல்ட் @ ஈசூன்’ பாலர் பள்ளித் தமிழாசிரியர் பா. ரூபிணி, தன் வகுப்பில் ‘லூகா’ என்ற இயந்திரத்தை அறிமுகப்படுத்தினார்.

அவருடைய குரலுடன் அந்த இயந்திரம் நிரல்படுத்தப்பட்டு, மாணவர்களுக்குக் கதைகளை வாசித்துக் காட்டுகிறது.

தமிழ் ஒரு மொழி மட்டுமன்று; அது பண்பாட்டையும் குறிக்கிறது என்றார் செல்வி ரூபிணி.

“மாணவர்களுக்குச் சிறந்த கற்றல் அனுபவத்தை வழங்குவதற்காக பெற்றோரும் வகுப்பறைக்குள் வரவேண்டும் என்று நான் விரும்புகிறேன்,” என்றார் அவர்.