தீய சக்தி திமுகவை முதலமைச்சர் விஜய் ஒழித்துவிட்டார்
தீய சக்தி திமுகவை முதலமைச்சர் விஜய் ஒழித்துவிட்டார் - அமைச்சர் நிர்மல் குமார்
இன்னும் கொஞ்ச நாட்களில் அண்ணா அறிவாலயத்தை வெள்ளையடித்து வாடகைக்கு விட வேண்டிய நிலை திமுகவுக்கு உருவாகும் என அமைச்சர் நிர்மல் குமார் விமர்சித்துள்ளார்.
Published : August 23, 2026 at 9:03 AM IST
மதுரை: திமுக எனும் தீய சக்தியை அழிக்க வேண்டும் என்ற எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் கனவை முதலமைச்சர் விஜய் நிறைவேற்றிவிட்டார் என அமைச்சர் நிர்மல் குமார் பேசினார்.
2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற த.வெ.க தலைவர் விஜய் தலைமையிலான புதிய அரசு, தமிழ்நாட்டில் பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக அரசு 100 நாட்களைக் கடந்ததை முன்னிட்டு, அதன் 100 நாள் ஆட்சி சாதனைகளை விளக்கும் விதமாக மதுரை மாவட்டம் வாடிபட்டியில் நேற்று (ஆக.22) பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், “40 ஆண்டுகளாக நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். சோழவந்தான் சட்டமன்றத் தொகுதியில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை.
இதுவரை எந்த தொகுதி எம்.எல்.ஏ.க்கள், அமைச்சரையாவது மக்கள் பார்த்திருப்பார்களா? இல்லை. ஏனென்றால், பணத்தை கொடுத்து வெற்றி பெற்றதோடு சரி, காணாமல் போய்விடுவார்கள். இனிமேல் அப்படி இல்லை.
நாங்கள் நல்ல மாற்றத்தை உருவாக்குவோம். நீங்கள் விரும்பி தேர்ந்தெடுத்த அரசு இது. உங்களுக்கான அரசு. தமிழக வெற்றிக் கழகம் சார்பாக மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செய்து தருவோம்” என உறுதியளித்தார்.
மேலும், “திமுகவில் சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக இருந்து மக்கள் பணத்தை கொள்ளை அடித்தவர்கள் யாராக இருந்தாலும் சரி, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
திமுகவை பழிவாங்க வேண்டியது இல்லை. மக்களே அவர்களை அடித்து துவைத்து வெளியேற்றி விட்டார்கள். நீங்கள் எவ்வளவு கொள்ளை அடித்தீர்கள்? என்று தெரிந்து தான் மக்கள் உங்களை ஆட்சியிலிருந்து வெளியேற்றி விட்டார்கள்.
எம்.ஜி.ஆர் தீய சக்தி திமுகவை ஒழித்தே தீருவோம் என்று சொன்னார். அதற்காகத்தான் நாங்கள் கட்சி ஆரம்பித்தோம். ஜெயலலிதாவும் தீய சக்தி திமுகவை ஒழிக்க வேண்டும் என்று சொன்னார். அந்த வகையில், முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் திமுகவை ஒழித்துக் கட்டி விட்டார்.
இன்னும் இரண்டு வருஷத்தில் அண்ணா அறிவாலயத்தை வெள்ளையடித்து, வாடகைக்கு விட வேண்டிய நிலை வரும். முரசொலி டிரஸ்ட்டை கைப்பற்ற அந்த குடும்பத்தில் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்” என பேசினார் அவர்.