📅 Tuesday, 28 July 2026 IST | ஆடி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 28, 2026 01:33 AM

திமுக எம்எல்ஏக்களை கைது செய்வதையே தவெக அரசு ஒரே வேலையாக செய்கிறது

திமுக எம்எல்ஏக்களை கைது செய்வதையே தவெக அரசு ஒரே வேலையாக செய்கிறது

திமுக எம்எல்ஏக்களை கைது செய்வதையே தவெக அரசு ஒரே வேலையாக செய்கிறது - உதயநிதி ஸ்டாலின் காட்டம்

தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மீது, அவர்களது கட்சியைச் சேர்ந்தவர்களே புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

Published : July 27, 2026 at 10:04 PM IST

திருநெல்வேலி: திமுக சட்டமன்ற உறுப்பினர்களை கைது செய்வதையே தவெக அரசு ஒரே வேலையாக செய்து வருவதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழக முதலமைச்சர் குறித்து கோவில்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவதூறாக பேசியதாகக் கூறி, விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார். நீதிமன்ற உத்தரவின்படி அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவரை திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, முன்னாள் அமைச்சர்கள் கே.என். நேரு, ரகுபதி ஆகியோர் நேரில் சந்தித்து சென்றனர். தொடர்ந்து, இன்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் மார்க்கண்டேயனை சிறையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், சட்ட உதவிகளை கழகம் வழங்கும் என உறுதி அளித்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர், அவர் தங்கியிருந்த விடுதியில் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், "திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்வதையே இந்த அரசு ஒரே பணியாக மேற்கொண்டு வருகிறது. முதலமைச்சரை தவறாக பேசிவிட்டார் என்பதற்காக மிரட்டும் பணியிலும் இந்த அரசு ஈடுபட்டு வருகிறது.

தலைவர் சொன்னார் என்பதற்காகவும், நானும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் நேரில் வந்து மார்க்கண்டேயனை சந்தித்தேன். திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை 'சோபா கொடுத்து வாங்குவதற்கான' பணிகளை மேற்கொள்வதை மட்டும் தான் இந்த அரசு செய்து வருகிறது. தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மீது, அவர்களது கட்சியைச் சேர்ந்தவர்களே புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்றார்.

இதனிடையே, மேகதாது அணை விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒன்றும் தெரியாது என அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் விமர்சித்துள்ளாரே? என செய்தியாளர் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளிக்காமல் உதயநிதி ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.