📅 Thursday, 10 September 2026 IST | ஆவணி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 10, 2026 08:33 AM

திமுகவின் கடந்தகால தவறுகளை இன்றைய தலைமுறை அறிய வேண்டும்: அமைச்சர் நிர்மல்குமார் தகவல்

திமுகவின் கடந்தகால தவறுகளை இன்றைய தலைமுறை அறிய வேண்டும்: அமைச்சர் நிர்மல்குமார் தகவல்

சென்னை: காவிரி, கச்சத்தீவு விவகாரங்களில் திமுகவின் கடந்த கால தவறுகளை இன்றைய தலைமுறை அறிந்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தெரிவித்தார்.

சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தவெக ஆதரவு கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏற்கெனவே எங்களிடம் சொல்லிவிட்டனர்.

மக்களுக்கான அனைத்து தேவைகளையும் செய்து கொடுக்கும் மக்களுக்கான அரசாங்கமாக நாங்கள் இருக்க போவதால், கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு 5 ஆண்டுகளுக்கு நீடிக்கும்.

திமுக செய்த தவறுகள், துரோகங்கள் என்ன, எதிலிருந்து தமிழகத்தை நாம் மாற்றி கொண்டு வருகிறோம் என்பதை சொல்லித்தான் ஆக வேண்டும். காவிரியில் என்ன தவறு செய்தார்கள் என்பதை கொண்டு வரவே 40 ஆண்டுகளானது.

கடந்த 5 ஆண்டுகளில் திமுக செய்த தவறை திருத்தி பழைய நிலைமைக்கு கொண்டு வர எவ்வளவு போராடி கொண்டு இருக்கிறோம் என மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

நீங்கள் எதை சொல்லி மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறீர்கள் என்பதை தெளிவுப்படுத்த வேண்டிய கட்டாயமும், இன்றைய தலைமுறையினர் அதனை அறிய வேண்டிய கட்டாயமும் உள்ளது.

காவிரி விவகாரத்தில் 1971 முதல் 74 வரை செய்த தவறுகளை இன்று வரையிலும் சரி செய்ய முடியவில்லை. கச்சத்தீவை தாரைவார்த்தார்கள். இன்று தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் அதற்கு அவர்கள் செய்த தவறு தானே காரணம்.

டாஸ்மாக் விவகாரத்தில் ரத்தீஷ் மீது வழக்கு பதிவு செய்து காவல் துறை விசாரித்து வருகிறது. அரசை முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் நடத்தலாம். ஆனால், ரத்தீஷ் என்ற தனிப்பட்ட நபரோ, மாப்பிள்ளை உடன் இருக்கும் நண்பர்களோ நடத்தக்கூடாது.

இந்த ரத்தீஷ் குறிஞ்சி இல்லத்தில் உதயநிதியுடன் 24 மணி நேரமும் இருந்தவர். வழக்கு போடப்பட்டுள்ள நிலையில், தற்போது லுக் அவுட் நோட்டீஸும் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.