📅 Saturday, 01 August 2026 IST | ஆடி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 01, 2026 04:30 PM

திமுகவின் உட்கட்சி பூசல்....போட்டுடைத்த தோப்பு....!

திமுகவின் உட்கட்சி பூசல்....போட்டுடைத்த தோப்பு....!

திமுகவின் உட்கட்சி பூசல்....போட்டுடைத்த தோப்பு....!

தோப்பு வெங்கடாசலம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், திமுகவின் தேர்தல் தோல்விக்கு தமிழக வெற்றிக் கழகம் காரணம் அல்ல என்றும், கட்சிக்குள் நிலவிய உட்கட்சி பூசல்தான் முக்கிய காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவரான தோப்பு வெங்கடாசலம், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சிக் காலத்தில் பெருந்துறை தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சராகவும் பணியாற்றியவர்.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் பெருந்துறை தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில், அதிமுக தலைமை அவருக்கு சீட் வழங்காமல் ஏமாற்றத்தை அளித்தது. இதனால் அதிருப்தியடைந்த அவர் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார். இதையடுத்து கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாகக் கூறி, அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அதிமுக தலைமை அவரை நீக்கியது.

அதனைத் தொடர்ந்து, 2021 ஜூலை 11-ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். அப்போது திமுகவின் கொள்கைகளை ஏற்று ஈரோட்டில் கட்சியை பலப்படுத்துவேன் என்றும் தெரிவித்திருந்தார்.

திமுகவில் இணைந்த பிறகு, ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளராகவும் தோப்பு வெங்கடாசலம் நியமிக்கப்பட்டார். ஆனால் தற்போது அந்தப் பொறுப்பிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.அவரது அறிவிப்பின்படி, ஈரோடு மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட பெருந்துறை தொகுதி ஈரோடு தெற்கு மாவட்டத்துடனும், பவானி தொகுதி ஈரோடு வடக்கு மாவட்டத்துடனும் இணைக்கப்பட்டு, அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் நிர்வகிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீடீரென்று திமுகவிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து பேசியதாவது, நான் "திமுகவுக்காக கடுமையாக உழைத்தேன். சட்டப்பேரவைத் தேர்தல் வரை என்னுடைய பணியை முழுமையாக செய்துள்ளேன். ஆனால் தேர்தலில் பெருந்துறை தொகுதியில் திமுக வெற்றியை மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் இழந்தது. தேர்தலுக்குப் பிறகு தலைமையின் ஆய்வுக் குழு வந்து ஆய்வு நடத்தியது. அவர்கள் அளித்த அறிக்கை என்ன என்பது எனக்குத் தெரியாது" என்றார்.

மேலும், "ஒரு மாதத்திற்குப் பிறகு நிர்வாகிகள் கூட்டம் நடத்தி அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான நிர்வாகிகள், சிலர் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் நான் யார் மீதும் குற்றச்சாட்டு கூறவில்லை; இனியும் கூறப் போவதில்லை" என்றும் தெரிவித்தார்.

திமுக தோல்விக்குக் காரணம் குறித்து பேசிய அவர், "திமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பூசல்தான் தோல்விக்கான முக்கிய காரணம். ஆனால் அதைப் பற்றி ஆய்வு செய்யாமல், தமிழக வெற்றிக் கழகத்தை (த.வெ.க.) குறைகூறுவது சரியல்ல. தோல்விக்கான உண்மையான காரணங்களை திமுக தலைமை கண்டறிய வேண்டும்" என்று அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் அதிமுகவில் இணையப் போவதாக வெளியான தகவல்களை மறுத்த அவர், "நான் தற்போது எந்தக் கட்சியிலும் இணையப் போவதில்லை. அதிமுகவில் சேரப் போகிறேன் என்ற தகவல் முற்றிலும் தவறானது. இன்னும் ஒரு வாரத்திற்குள் என்னுடைய அடுத்தகட்ட நிலைப்பாடு குறித்து விளக்கம் வரும்" எனக் கூறினார்.

தொடர்ந்து, "நான் திமுகவுக்கு வந்தது பதவிக்காகவோ, தனிப்பட்ட வளர்ச்சிக்காகவோ அல்ல. வெற்றி பெறாத தொகுதியை வெற்றிப் பாதைக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே கடுமையாக உழைத்தேன். நான் எங்கு பணியாற்றினாலும் நேர்மையாகவும் விருப்பு-வெறுப்பின்றியும் செயல்பட்டுள்ளேன்" என்றும் தோப்பு வெங்கடாசலம் தெரிவித்தார்.

முன்னதாக, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில், ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்து தோப்பு வெங்கடாசலம் விடுவிக்கப்பட்டதாகவும், பெருந்துறை தொகுதி ஈரோடு தெற்கு மாவட்டத்துடனும், பவானி தொகுதி ஈரோடு வடக்கு மாவட்டத்துடனும் இணைக்கப்பட்டு அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் நிர்வகிப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தோப்பு வெங்கடாசலத்தின் இந்த விளக்கம் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும் திமுகவின் தோல்விற்கு முக்கிய காரணம் உட்கட்சி பூசல் தான் தோப்பு கூறியுள்ள நிலையில் இந்த தகவல் அனைவரும் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு திமுக தலைமையின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று அனைவரும் மத்தியில் எதிர்பார்ப்பு கிளப்பியுள்ளது.