📅 Wednesday, 25 November 2026 IST | கார்த்திகை 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics November 25, 2026 08:30 PM

தமிழ் மீட்பு இயக்கம்: புதிய அமைப்பை தொடங்கினார் ராமதாஸ்

தமிழ் மீட்பு இயக்கம்: புதிய அமைப்பை தொடங்கினார் ராமதாஸ்

விழுப்புரம்: ‘தமிழ் மீட்பு இயக்கம்’ என்ற புதிய அமைப்பை தொடங்கி இருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

பாமகவை தக்க வைத்துக்கொள்ள, தனது மகன் அன்புமணி மற்றும் மருமகள் சவுமியாவுடன் கடந்த இரு ஆண்டுகளாக போராடி வந்த நிறுவனர் ராமதாஸ், சட்டப்பேரவைத் தேர்தலில் படுதோல்வியை சந்தித்தார். அவர் மூலம் களம் இறக்கப்பட்ட வேட்பாளர்கள் அனைவரும், சொற்ப வாக்குகளை பெற்று டெபாசிட் இழந்தனர். அதேநேரத்தில், ராமதாஸின் சொந்த மாவட்டமான விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இரு தொகுதிகள் உட்பட 4 தொகுதிகளில் அன்புமணியின் ஆதரவாளர்கள் வெற்றி வாகை சூடினர்.

இதையடுத்து ‘அரசியல் துறவறம் பூண்டுள்ளதாக’ கடந்த ஜுலை மாதம் நடைபெற்ற தனது பிறந்தநாள் விழாவில் ராமதாஸ் அறிவித்தார். மேலும் பாமக தலைவர் அன்புமணிக்கு பாட்டாளி சொந்தங்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். தன்னை சந்திக்க வரும் நபர்கள், அரசியல் பேசக் கூடாது என தனது வீட்டு வாசலில் பலகையை மாட்டினார்.

இந்நிலையில், நான்கு மாதங்களாக அமைதியாக இருந்த பாமக நிறுவனர் ராமதாஸ், ‘தமிழ் மீட்பு இயக்கம்’ என்ற புதிய அமைப்பை தொடங்கி இருப்பதாக அறிவித்துள்ளார்.

பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை நிறுவனர் என்ற பெயரில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: 'எங்கும் தமிழ் எதிலும் தமிழ்' என்பது, இன்று வரையிலும் தமிழ்நாட்டில் ஒரு வெற்று முழக்கமாகவே இருந்துவருகிறது. 'இயன்றவரை இனியதமிழ்!' என்பதும் எள்ளளவும் எடுபடவில்லை. தமிழில் உரையாடுகையிலும் ஆங்கிலம் உள்ளிட்ட வேற்று மொழிகளின் கலப்படம், தமிழ்நாட்டின் சிற்றூர் மக்கள் வரை ஊடுருவிப் பாய்ந்து பெருகிக் கொண்டிருக்கிறது.

பயிற்று மொழி, இறை வழிபாடு, பண்பாட்டு நிகழ்வுகள், நீதிமன்ற வழக்கு ஆய்வுகள் என்றெல்லாம் நீளுகின்ற தமிழ்நாட்டின் பல்வேறு களங்களில், தமிழர்களின் தாய்மொழியான தமிழ், அதற்குரிய பயன்பாட்டில் இல்லை. கடைவீதிகளின் பெயர்ப் பலகைகளில் தமிழ் இடம்பெற வேண்டுமென அரசாணைகளும், அதை வலியுறுத்துகின்ற நீதிமன்ற கட்டளைகளும் கூட எத்தரப்பினராலும் கவனத்தில் கொள்ளப்படவில்லை.

இந்த நிலையானது, உலகப் பெரும்பான்மை மக்களின் மொழிகளில் எவ்வொன்றுக்கும் நேர்ந்திடாத அவல நிலையாகும். இத்தகைய மொழி அழிவுப் போக்கானது, தமிழினத்தின் மீளமுடியாத வீழ்ச்சிக்கான உறுதியான சான்றாக இருக்கிறது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. கடந்த ஐம்பது ஆண்டுகளில் தீவிரம் பெற்றுள்ள, இந்த அவல நிலையை மாற்ற தமிழறிஞர்களும், தமிழர்களும் பல்வேறு வகையில் பல்வேறு காலக் கட்டங்களில் போராடினர், இடையறாமல் போராடியும் வருகின்றனர்.

என்றாலும் கூட, உரிய அளவில் உயரிய முறையில், நமது தாய்த் தமிழ் மொழிக்கு வேண்டிய உரிமைகளின் அடிப்படையிலான மாற்றங்கள் ஏதும் பெரிதாக நிகழவில்லை. 'மெல்லத் தமிழினிச் சாகும்' என்று ஒரு பேதை உரைத்ததாக, தமிழ்த்தாய் சொல்வதுபோல், மகாகவி பாரதி எழுதியது போலத்தான் இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிறது.

எனவே. நமது நிகழ்காலத்தில் வேகமாக அழிவிற்குள்ளாகி வருகின்ற நமது தாய்த்தமிழை மீட்கவும், தமிழ் என்கிற நமது மொழியைத் தமிழர் வாழ்வியலின் பயன்பாட்டு மொழியாக மாற்றவும் நாம் தொடர்ந்தும், கூடுதல் வலிமையோடும் உறுதியாகப் போராடியாக வேண்டும்.

தமிழ் மக்களிடையே நிலவி வரும் அனைத்து வகை வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டு ஒன்றிணைந்து, நமது தாய்த்தமிழின் உரிமைகளை மட்டுமே ஒற்றைக் குறிக்கோளாகக் கொண்டு, 'தமிழ் மீட்பு இயக்கம்' என்னும் ஓர் இயக்கம், பல்வேறு தமிழ் உணர்வாளர்களுடன் இணைந்து எமது பொறுப்பில் முன்னெடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த அமைப்பின் கலந்துரையாடல் கூட்டம், திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் எனது தலைமையில் கடந்த 22-ம் தேதி நடைபெற்றது.

இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தில் தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று, தங்களது கருத்துகளை எடுத்துரைத்தனர். இவ்வமைப்பின் அடுத்தடுத்த செயல்பாடுகள் குறித்து, மேலும் கூடுதலான தமிழ் ஆளுமைகளைக் கொண்ட கலந்தாய்வுக் கூட்டங்களுக்குப் பின்னர் அறிவிப்பு செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.