கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் விசாரணைக்கு ஆணை
சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி, அவரது இல்லத்தில் தகாத முறையில் நடந்து கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷுக்குக் காவல்துறையினர் புதன்கிழமை காலை நேரில் அழைப்பாணை வழங்கினர்.
இவ்விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர் ஆர்.திரிசூலி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
தேசிய மகளிர் ஆணையம் அறிக்கை கோரியுள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆட்சியரின் கண்ணியத்தைக் குறைக்கும் பதிவுகள் குறித்து விசாரிக்கவும், மின்னிலக்க ஆதாரங்களைப் பாதுகாக்கவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி வி.லட்சுமி நாராயணன், விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார். அத்துடன், டிசம்பர் 22 ஆம் தேதிக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, புலன் விசாரணை அதிகாரியாக திருப்பூர் காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங்கும், கண்காணிப்பு அதிகாரியாக நிர்வாகக் காவல்துறைத் தலைவர் காமினியும் நியமிக்கப்பட்டனர்.
புதன்கிழமை காலை அருள் விக்னேஷின் அலுவலகம் முன் காவல்துறையினர் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக, காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி அவரிடம் அழைப்பாணை வழங்கி, அவரிடமும் அவரது குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தி, மேலதிக விசாரணைக்கு முன்னிலையாக வலியுறுத்தினார்.
அருள் விக்னேஷ் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் பரவியுள்ள நிலையில், அரசியல் அழுத்தங்களால் அவர் பதவி விலக முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தவெக அரசாங்கத்திற்குச் சிக்கலை ஏற்படுத்திய அருள் விக்னேஷை பதவியில் இருந்து விலக வைப்பதற்கு கட்சி தலைமை தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என திமுக, அதிமுக, தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.