📅 Wednesday, 25 November 2026 IST | கார்த்திகை 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports November 25, 2026 08:31 PM

களத்திற்கு தாமதமாக வந்ததால் தண்டனை.. ஸ்டம்பில் நேரடியாக பந்தை தாக்கி வீராங்கனை அவுட் என அறிவிப்பு

களத்திற்கு தாமதமாக வந்ததால் தண்டனை.. ஸ்டம்பில் நேரடியாக பந்தை தாக்கி வீராங்கனை அவுட் என அறிவிப்பு

களத்திற்கு தாமதமாக வந்ததால் தண்டனை.. ஸ்டம்பில் நேரடியாக பந்தை தாக்கி வீராங்கனை அவுட் என அறிவிப்பு

மெல்போர்ன்: மகளிர் பிக் பேஷ் லீக் 2026 போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் வீராங்கனை டீன்ட்ரா டாட்டின், ஒரு பந்து கூட சந்திக்காமல் விசித்திரமான முறையில் ஆட்டமிழந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மெல்போர்ன் ஜங்ஷன் ஓவல் மைதானத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் மகளிர் அணிக்கும் பிரிஸ்பேன் ஹீட் மகளிர் அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்காக விளையாடும் மேற்கிந்தியத் தீவுகளின் ஆல்ரவுண்டரான டீன்ட்ரா டாட்டின், பேட்டிங் செய்ய களத்திற்கு வர தாமதமானதால், பந்தை எதிர்கொள்ளும் வாய்ப்பை இழந்தார். பிரிஸ்பேன் ஹீட் அணியின் லெக் ஸ்பின்னர் சாரா கிளென், பேட்டர் இல்லாமல் காலியாக இருந்த ஸ்டம்புகளை நோக்கிப் பந்துவீசி விக்கெட்டை வீழ்த்தினார். டாட்டின் தூரத்தில் நின்று அதை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.

டபிள்யூபிபிஎல் தொடரின் சிறப்பு விதிகளின்படி, ஒரு விக்கெட் விழுந்த பிறகு புதிய பேட்டர் 75 வினாடிகளுக்குள் அடுத்த பந்தை எதிர்கொள்ள தயாராக வேண்டும். தவறினால், அந்த பேட்டர் தனது இன்னிங்ஸின் முதல் பந்தின் போது லெக் சைடில் ஸ்டம்ப் கோட்டிலிருந்து குறைந்தபட்சம் ஐந்து மீட்டர் தள்ளி நிற்க வேண்டும்.

இந்த நேரத்தில் பந்துவீச்சாளர் ஸ்டம்பை நோக்கி பந்துவீச அனுமதிக்கப்படுவார். பந்துவீச்சாளர் ஸ்டம்பில் பந்தை மோதச் செய்தால், பேட்டர் போல்டு முறையில் ஆட்டமிழந்தவராக அறிவிக்கப்படுவார். ஒருவேளை பந்து ஸ்டம்பில் படாவிட்டால், அது டாட் பந்தாகக் கணக்கிடப்படும். இந்த விதியின்படி, டாட்டின் தயாராக இல்லாததால், சாரா கிளென்னிற்கு காலி ஸ்டம்பை நோக்கி பந்துவீச வாய்ப்பு கிடைத்தது. அவர் சரியாக ஸ்டம்பைத் தாக்கியதால் டாட்டின் ஒரு பந்தைக் கூட சந்திக்காமல் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார்.

மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி சேஸிங்கின் போது 14.2 ஓவர்களில் 97/5 ரன்கள் எடுத்திருந்தபோது இந்த விக்கெட் வீழ்ந்தது. முன்னதாக, முதலில் பேட்டிங் செய்த பிரிஸ்பேன் ஹீட் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது. சாரா கிளென் பேட்டிங்கிலும் பங்களித்து 15 ரன்கள் எடுத்தார். மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி சார்பில் கேப்டன் சோஃபி மோலினக்ஸ் 20 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளையும், ஹேலி மேத்யூஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

138 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியில் டெஸ் ஃபிலிண்டாஃப் 32 பந்துகளில் 30 ரன்களும், ஜார்ஜியா வேர்ஹாம் 26 பந்துகளில் 29 ரன்களும் எடுத்தனர். சோஃபி மோலினக்ஸ் 18 ரன்களும், குளோய் டிரையான் 17 பந்துகளில் 19 ரன்களும் சேர்த்தனர். இறுதியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.