தமிழ் வெறும் மொழியன்று, பண்பாட்டு அனுபவம்!
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு மிகுந்த நிச்சயமற்ற சூழ்நிலையில் பாலர் பள்ளித் தமிழ் ஆசிரியராகத் தம் பணியைத் தொடங்கினார் பா. ரூபிணி, 28.
“கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக, ஒவ்வொரு பாடமும் வீட்டிலிருந்தே கற்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டது. சிறாருக்குத் திரையின்வழி கற்பிப்பது மிகவும் சவாலாக இருந்தது,” என்று அவர் சொன்னார்.
இருப்பினும், ரூபிணியின் மாணவர் ஒருவர் பாலர் பள்ளி முடிந்து தொடக்கப் பள்ளியில் சேர்ந்தபோது அவரை அம்மாணவரின் பெற்றோர் தொடர்புகொண்டனர்.
அந்த மாணவர் தற்போது தொடக்கப் பள்ளித் தமிழ் வகுப்பில் நன்றாகப் படித்து வருவதாகத் தெரிவித்த பெற்றோர், ரூபிணிக்குத் தங்கள் நன்றியைத் தெரிவித்தனர்.
“நான் சரியான பாதையில்தான் செல்கிறேன் என்பதை அந்தத் தருணம் எனக்கு உணர்த்தியது,” என்றார் ரூபிணி.
தமது தொடக்கப் பள்ளித் தமிழ் ஆசிரியரால் ஊக்கம் பெற்ற ரூபிணி, சிறாருக்குத் தமிழ் கற்பிக்க விரும்பினார்.
சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) நடைபெற்ற தாய்மொழிகள் கருத்தரங்கில் சிறந்த பாலர் பள்ளித் தாய்மொழி ஆசிரியர் விருதைப் பெற்றார் ரூபிணி.
“என்ன செய்வதென்று அறியாமல் இருந்தேன்,” என்று விருது கிடைத்த தன் மனநிலையைப் பற்றி அவர் பகிர்ந்துகொண்டார்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
தன் வகுப்புகளின்போது தன் மாணவர்களை இயற்கைச் சூழல்கள், பெருவிரைவு ரயில் நிலையங்கள் அல்லது தீபாவளி, பொங்கல் போன்ற விழாக்காலங்களில் லிட்டில் இந்தியாவிற்கு அழைத்துச் செல்வார் ரூபிணி.
“தமிழ் என்பது வெறும் மொழி மட்டுமன்று, அது அனுபவித்து உணர வேண்டிய ஒரு பண்பாடு என்பதை மாணவர்கள் உணர வேண்டும்,” என்றார்.
வகுப்பறைக்குள்ளும் அவர் தமிழ்ப் பண்பாட்டுவழி மொழியாற்றலைக் கொண்டுவர முயல்கிறார்.
எடுத்துக்காட்டாக, ஓர் எளிய கோலம் போடும் நடவடிக்கையில் பாலர் பள்ளி மாணவர்களுக்கான ஏராளமான கற்றல் கூறுகள் பொதிந்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
“அரிசி மாவைத் தொடுவது, வண்ணங்களின் தமிழ்ப் பெயர்களை அறிந்துகொள்வது போன்றவை ஆரம்பக் கல்விக்கு முக்கியமான செயல்பாடுகள்,” என்று கூறினார் ரூபிணி.
செயற்கை நுண்ணறிவும் ரூபிணியின் வகுப்பறையில் ஓர் அங்கமாக அமைந்துள்ளது.
‘லூகா’ என்ற ‘ரோபோ’ கருவிவழி அவரது மாணவர்கள் தமிழில் கதைகளைக் கேட்பார்கள்.
சீனாவில் தயாரிக்கப்பட்ட ‘லூகா’ ரோபோ ஆங்கிலம் மற்றும் சீன மொழியை அடையாளம் காணும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அதன் குரற்பதிவுச் செயல்பாடுவழி ரூபிணி தமிழ்ப் புத்தகங்களை வாசித்து, தன் சொந்தக் குரலில் பதிவுசெய்வார்.
“என் மாணவர்கள் வழக்கமாக லூகாவைப் பார்த்து மிகவும் உற்சாகமடைவர். அவர்களைக் கட்டாயப்படுத்தாமல் வாசிக்க வைப்பதற்கு இது ஒரு சிறந்த வழி,” என்றார்.
பாலர் பள்ளிகளுக்கான பாடத்திட்டத்தை உருவாக்குவதே ரூபிணியின் நீண்டகால இலக்கு.
“இப்போது, குறிப்பாக பாலர் கல்வியில் தமிழுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது,” என்று சொன்னார் ரூபிணி.
தமிழ் கற்க விரும்பும் குழந்தைகளுக்கு அதிக வாய்ப்புகளும், தங்கள் பிள்ளைகளுக்கு உதவ விரும்பும் பெற்றோருக்குக் கூடுதல் ஆதரவும் வழங்கப்பட வேண்டும் என்று அவர் கருதுகிறார்.
“தமிழ் ஒரு மொழியன்று, அது ஒரு பண்பாடு என்பதை ஒரு குழந்தைக்குச் சொல்லித் தருவதற்குப் பெற்றோர், ஆசிரியர், சமூகம் என அனைவரின் பங்கும் தேவைப்படுகிறது,” என்று ரூபிணி வலியுறுத்தினார்.