📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 16, 2026 05:34 PM

தமிழக அரசியலில் புதிய திருப்பம் : முதலமைச்சர் விஜய்க்கு புதிய தலைவலி..!!

தமிழக அரசியலில் புதிய திருப்பம் : முதலமைச்சர் விஜய்க்கு புதிய தலைவலி..!!

தமிழக அரசியலில் புதிய திருப்பம் : முதலமைச்சர் விஜய்க்கு புதிய தலைவலி..!!

சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு, பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுகவிலிருந்து அடுத்தடுத்து சில எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றனர். இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், தவெகவின் கூட்டணி கட்சிகளே இந்த கட்சித் தாவல் நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவிக்கத் தொடங்கியிருப்பது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, தவெக அரசுக்கு ஆதரவளித்து அமைச்சரவையில் இணைந்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவர் தொல். திருமாவளவன், இந்த விவகாரத்தில் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாற்றுக்கட்சி எம்.எல்.ஏ.க்களை, குறிப்பாக பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிலிருந்து எம்.எல்.ஏ.க்களை தவெகவில் இணைத்துக் கொள்வது அரசியல் அறத்திற்கு அப்பாற்பட்டது என்று சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், மக்களின் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகள் இவ்வாறு கட்சி மாறுவதை தவெக தலைமை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கூட்டணி ஆட்சி அமைந்த சில மாதங்களிலேயே தவெகவின் முக்கிய கூட்டணிக் கட்சியான விசிக இந்த விவகாரத்தை கையில் எடுத்திருப்பது முதலமைச்சர் விஜய்க்கு ஒரு புதிய தலைவலியாக மாறியுள்ளது. ஏற்கனவே பாஜகவின் ‘ஆபரேஷன் தாமரை’ பாணியிலான அரசியல் இது என்ற விமர்சனங்கள் எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்படும் நிலையில், தற்போது திருமாவளவனும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பது தவெக தலைமைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. தூய்மையான அரசியல் மற்றும் ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தவெக, இதுபோன்ற கட்சித் தாவல்களை ஊக்குவிக்கக் கூடாது என்பதே திருமாவளவனின் பிரதான வாதமாக உள்ளது.

தமிழகத்தின் மாறும் அரசியல் சமன்பாடுகளுக்கு மத்தியில், இந்த விவகாரம் தவெக-விசிக இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்துமா அல்லது தவெக தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.