📅 Sunday, 02 August 2026 IST | ஆடி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 02, 2026 08:32 PM

தமிழகம் முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடக்கம்

தமிழகம் முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடக்கம்

தமிழகம் முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு வரும் களப்பணியாளர்களின் அடையாள அட்டையை சரிபார்த்த பிறகே, பொதுமக்கள் தங்களது தகவல்களை வழங்க வேண்டும் என்று வேலூர் ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Published : August 1, 2026 at 3:24 PM IST

வேலூர்: தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. இதனை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தொடங்கி வைத்தனர்.

பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, கடந்த 2011-க்கு பிறகு 2021-ல் கரோனோ தொற்று காரணமாக கணக்கெடுப்பு நடக்கவில்லை.

இந்நிலையில், மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒருபகுதியாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள வீட்டுப்பட்டியல் மற்றும் வீட்டு வசதிக் கணக்கெடுப்பு பணிகள் இன்று (ஆக.1) முதல் ஆக.30ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், 19 ஆயிரம் அதிகாரிகளின் மேற்பார்வையில் 1.15 லட்சம் களப்பணியாளர்கள் ஈடுபட உள்ளனர்.

இந்தியாவில் முதல்முறையாக, 33 கேள்விகள் அடங்கிய படிவம் மூலம் டிஜிட்டல் முறையில் தகவல்கள் திரட்டப்பட உள்ளன. 1948-ம் ஆண்டுச் சட்டத்தின்படி, தனிநபர் தகவல்கள் பாதுகாப்பாகவும் ரகசியமாகவும் வைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அந்த வகையில், உலக மக்கள்தொகை தினத்தை முன்னிட்டு, இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியின் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டத்தில் மக்கள்தொகையை கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கியது.

இந்த பணியை, சத்துவாச்சாரி இரண்டாவது மண்டலத்திற்குட்பட்ட ஆர்.டி.ஓ சாலையில் உள்ள வீடுகளுக்கு நேரில் சென்று தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ், ஆன்லைன் முறையில் பதிவு செய்யும் பணியை பார்வையிட்டார்.

வேலூரில் மொத்தம் 2,686 களப்பணியாளர்கள் வீடு தோறும் சென்று மக்கள்தொகை விவரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் பணிகளை கண்காணிப்பதற்காக தனித்தனி கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் லீலா அலெக்ஸ், “மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது நாட்டின் திட்டமிடல் மற்றும் வளர்ச்சிக்கான மிக முக்கியமான பணியாகும். இப்பணிக்காக பெரும்பாலும் ஆசிரியர்கள் களப்பணியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் கணக்கெடுப்பில் துல்லியமும், தவறுகள் இல்லாத வகையிலும் பணிகள் நடைபெறும்” என்றார்.

மேலும், “களப்பணியாளர்களுக்கு அதிகாரப்பூர்வ அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் வீடுகளுக்கு வரும்போது பொதுமக்கள் அடையாள அட்டையை சரிபார்த்த பிறகு, தேவையான தகவல்களை வழங்கி, முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அதேபோல, கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடக்கவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் நேரில் பார்வையிட்டு தொடங்கி வைத்தார்.

இப்பணிகளில் ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ள நிலையில், பணி நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், இதற்கான பிரத்தியேக செயலி கொடுக்கப்பட்டுள்ளதால் பணி எளிமையாக இருப்பதாகவும், கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் தெரிவித்தனர்.