📅 Tuesday, 28 July 2026 IST | ஆடி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 28, 2026 12:32 PM

“தமிழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முதலிடம்; ஆளுநர் மாளிகை மாறுபடுவது தவறு”

“தமிழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முதலிடம்; ஆளுநர் மாளிகை மாறுபடுவது தவறு”

அமைச்சர் நிர்மல் குமார் | கோப்புப் படம்

சென்னை: “தமிழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முதலிடம் கொடுக்கப்பட வேண்டும். இதில் நிறைய மாறுதலான வழிகாட்டுதல்களை ஆளுநர் மாளிகை அளித்ததாக கேள்விப் படுகிறோம், இது தவறான விஷயம்” என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மல் குமார், “ கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அளிக்கப்பட்ட அரசு வேலையை ரத்து செய்வதாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதில் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுப்பது என ஆலோசித்து முடிவெடுப்போம்.

மேகேதாட்டு விவகாரம் குறித்து பல தரப்பினரிடமும் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். அதன் பின்னர் எந்த நடவடிக்கை எடுத்தால் சரியாக இருக்கும் என முதல்வர் முடிவெடுப்பார்.

தமிழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். இதில் நிறைய மாறுதலான வழிகாட்டுதல்களை ஆளுநர் மாளிகை அளித்ததாக கேள்விப் படுகிறோம். பாஜக ஆளும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில், அந்தந்த மாநில மொழிகளின் வாழ்த்தே முதலில் பாடப்படுகிறது. தமிழகத்தில் மாறாக செய்வது தவறான விஷயம். எனவே தமிழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முதலிடம் அளிக்க வேண்டும்” என்றார்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார். இந்த பட்டமளிப்பு விழாவில் முதலில் வந்தே மாதரம் பாடலும், இரண்டாவதாக தேசிய கீதமும், மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது.

இந்த பட்டமளிப்பு விழா குறித்து சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சந்திரசேகர், “ இந்த பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் கலந்து கொள்ள இருப்பதால் விழாவின் தொடக்கத்தில் வந்தே மாதரம் பாடலும், அதனைத் தொடர்ந்து தேசிய கீதமும், மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட வேண்டும் என ஆளுநர் மாளிகை உறுதியாக உத்தரவிட்டுள்ளது. இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை என்றால் என் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

ஆளுநர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.