📅 Tuesday, 16 June 2026 IST | ஆனி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu June 15, 2026 11:30 PM

தமிழ்நாட்டில் தமிழ் மொழி விருப்பப் பாடமாக மாற்றப்படுவதை ஏற்க முடியாது

தமிழ்நாட்டில் தமிழ் மொழி விருப்பப் பாடமாக மாற்றப்படுவதை ஏற்க முடியாது

தமிழ்நாட்டில் தமிழ் மொழி விருப்பப் பாடமாக மாற்றப்படுவதை ஏற்க முடியாது - சு.வெங்கடேசன் எம்.பி. ஆவேசம்

நீட் தேர்வு குளறுபடி விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

Published : June 15, 2026 at 10:57 PM IST

மதுரை: தமிழ்நாட்டில் தமிழ்மொழி விருப்பப் பாடமாக மாற்றப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 23-வது வார்டு பகுதியில் புதிய ரேஷன் கடைத் திறப்பு விழாவில் கலந்து கொண்ட மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், "மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூபாய் 70 லட்சம் செலவில் கட்டப்பட்ட 10 புதிய கட்டிடங்கள் மக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளன. பள்ளிக் கட்டிடங்கள் மற்றும் ரேஷன் கடைகள் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

நாடு முழுவதும் சுமார் 20 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெற்றதை தேசிய தேர்வு முகமை ஏற்றுக் கொண்டுள்ளது. இதையடுத்து நீட் மறுதேர்வு நடத்தப்படுகிறது. மாணவர்கள் ஏற்கனவே செலுத்திய தேர்வுக் கட்டணத்தைத் திருப்பி வழங்குவதாக உச்சநீதிமன்றத்தில் உறுதியளித்த தேசிய தேர்வு முகமை, தற்போது ஹால் டிக்கெட் பதிவிறக்க இணையதளத்தில் வங்கிக் கணக்கு விவரங்களைக் கேட்டு தொழில்நுட்ப ரீதியாக மாணவர்கள் பணத்தை திரும்பப் பெற முடியாத சூழலை உருவாக்கியது.

இது திட்டமிட்ட செயல்; இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டியது தேசிய தேர்வு முகமையின் கடமை. மாணவர்களுக்கு தேவையானது ஹால் டிக்கெட் மட்டுமே. அதற்கும், வங்கிக் கணக்கு விவரங்களுக்கும் தொடர்பில்லை. தேர்வு முகமையின் அலட்சியம் காரணமாகவே மறுதேர்வு நடத்தப்படும் நிலையில், மாணவர்களும், பெற்றோர்களும் கூடுதல் மனஅழுத்தத்தையும், பொருளாதார சுமையையும் சந்திக்க நேரிட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தார்மீகமாகப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சமஸ்கிருதத்தைக் கட்டாயப்படுத்தும் முயற்சி, மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நடவடிக்கையாகும். தமிழ்நாட்டில் தமிழ்மொழி விருப்பப் பாடமாக மாற்றப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீட்டிற்கு எந்த தொடர்பும் இல்லை; அரசியல் நோக்கத்துடன் பாஜக அரசுக் கொண்டு வந்த முயற்சியை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து முறியடித்துள்ளனர். மீண்டும் அதைக் கொண்டு வர மத்திய அரசுக்கு தைரியம் இருக்காது.

கீழடி அகழாய்வுக்கான அனுமதியை மத்திய அரசு தாமதப்படுத்திய போதிலும், தற்போது இந்த ஆண்டுக்கான அனுமதி வழங்கப்பட்டு அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது. புதிய கண்டுபிடிப்புகள் இதுவரை முன்வைக்கப்பட்ட கருத்துகளை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் எந்த சமரசமும் இருக்கக் கூடாது; விரைவும் துரிதமும் அவசியம்" என்று தெரிவித்துள்ளார்.