📅 Wednesday, 19 August 2026 IST | ஆவணி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 19, 2026 04:34 AM

தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடுவதை யாரும் தடுக்கவில்லை: ஐகோர்ட்

தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடுவதை யாரும் தடுக்கவில்லை: ஐகோர்ட்

சென்னை: 'மத்திய அரசின் புதிய அறிவிப்பின்படி, தமிழகத்தில் அரசு நிகழ்ச்சிகளில், முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை யாரும் தடுக்கவில்லை' என, சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.

தமிழகத்தில் அரசு நிகழ்ச்சிகளை, தமிழ்த்தாய் வாழ்த்து பாடி தொடங்குவதை உறுதி செய்ய, அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி, சென்னையைச் சேர்ந்த அனன்யா ராதாகிருஷ்ணன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசு தரப்பில், 'மத்திய உள்துறை அமைச்சகம், ஜூலை 9ம் தேதி பிறப்பித்த புதிய அறிவிப்பாணைபடி, 'வந்தே மாதரமும், தேசிய கீதமும்' அடுத்தடுத்து பாடப்பட வேண்டும்.

'வந்தே மாதரம், தேசிய கீதம் இரண்டில், வந்தே மாதரம் பாடலை முதலில் பாட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மாநில பாடல் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. 'மாநில பாடலை இறுதியில் தான் பாட வேண்டும் என்று, அதில் கூறப்படவில்லை' என தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 'புதிய அறிவிப்பாணையில், தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவதை யாரும் தடுக்கவில்லை; பின், வந்தே மாதரத்தை முதலிலும், தேசிய கீதத்தை இறுதியிலும் பாட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

'இந்த அடிப்படையில் தான், சுதந்திர தினத்தன்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், அதை தொடர்ந்து வந்தே மாதரம், தேசிய கீதம் பாடப்பட்டன' என தெளிவுபடுத்தினர். இந்த மனு மீதான உத்தரவை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.