வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.5,000 உ.பி., தேர்தல் அறிக்கை வெளியிட்டார் அகிலேஷ்
லக்னோ: உத்தர பிரதேசத்தில், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், இளைய தலைமுறையினரை கவரும் வகையில் பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்கும் வரை மாதம் 5,000 ரூபாய் உதவித்தொகை, 25 லட்சம் பேருக்கு அரசு வேலை உட்பட பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளார்.
உ.பி.,யில், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி 2012 – 17 வரை ஆட்சியில் இருந்தது. தற்போது ஆளும் கட்சியாக பா.ஜ., உள்ள நிலையில், பிப்ரவரிக்குள் அங்கு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.
இந்நிலையில், லக்னோவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், ‘மக்கள் நல தேர்தல் அறிக்கை’, ‘பிற்படுத்தப்பட்ட, தாழ்தப்பட்ட மக்களுக்கான உறுதிமொழி’ என்ற பெயர்களில் சமாஜ்வாதி கட்சியின் தேர்தல் அறிக்கையை அகிலேஷ் யாதவ் வெளியிட்டார்.
இளைய தலைமுறையினர், பெண்கள், விவசாயிகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட பிரிவினருக்கு முக்கியத்துவம் அளித்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய வாக்குறுதிகளின் விபரம்:
* மாநிலத்தில் கோரப்படும் 50 கோடி ரூபாய் வரையிலான அரசு ஒப்பந்தங்களில் பிற்படுத்தப்பட்டோர், தலித், சிறுபான்மையினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும்.
* பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்கும் வரை மாதம் 5,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.
* 25 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும்.
*பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.40,000 நிதியுதவி வழங்கப்படும்.
* பெண் குழந்தைகளுக்கு தொடக்க கல்வி முதல் முதுகலை வரை இலவச கல்வி வழங்கப்படும். தனியார் பள்ளிகளில் படிக்கும் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசு செலுத்தும்.
* ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி, அவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்படும்.
* கிராமப்புற இளைஞர்களின் கல்வி, வியாபார வாய்ப்புகளை பெருக்க இலவச ‘வை – -பை’ வசதி, தெருவிளக்குகள், மின்சாரம், தார் சாலைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்.
* மாநிலம் முழுதும் இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் ஆம்புலன்ஸ் சேவை வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.