தொகுதி மறுவரையறை விவகாரம் தான, பேத, தண்ட உத்தியை பயன்படுத்தும் மோடி அரசு: காங். விமர்சனம்
தொகுதி மறுவரையறை விவகாரம் தான, பேத, தண்ட உத்தியை பயன்படுத்தும் மோடி அரசு: காங். விமர்சனம்
புதுடெல்லி: சாணக்கியரின் அர்த்தசாஸ்திரத்தில் சாம, தான, பேத, தண்ட என 4 அரசியல் உத்திகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதில் சாம என்பது பேச்சுவார்த்தையையும், தான என்பது பணம், பரிசு கொடுத்து உடன்பட வைப்பதையும், பேத என்பது பிளவுகளை ஏற்படுத்தி காரியத்தை சாதிப்பதையும், தண்ட என்பது தண்டனை அல்லது நிறுவன ரீதியான அழுத்தத்தை தருவதையும் குறிக்கிறது.
இதை ஒப்பிட்டு, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: தீய நோக்கம் கொண்ட தொகுதி மறுவரையறை மசோதாக்களை நிறைவேற்றுவதற்காக, மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெறத் துடித்த, தன்னை சாணக்கியன் என கூறிக் கொள்பவர், அர்த்தசாஸ்திரத்தில் கூறப்பட்ட கடைசி 3 உத்திகளை பயன்படுத்தியும் தோல்வியடைந்துள்ளார். ஏன் அவர் முதல் உத்தியைப் பயன்படுத்தவில்லை?
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கடந்த 7 மாதங்களில் 4 முறை பிரதமருக்குக் கடிதம் எழுதி, பேச்சுவார்த்தை எனும் வழியைப் பின்பற்றுமாறு வலியுறுத்தினார். ஆனால், அந்தக் கடிதங்களுக்கு பதில் வரவில்லை.
பிரதமர்-உள்துறை அமைச்சர் ஜோடி தாங்களே உருவாக்கிய பொய்களிலும் தற்பெருமைகளிலும் சிக்கிக்கொண்டிருக்கலாம் அல்லது ஏதோ ஒரு மிகவும் மோசமான சதித்திட்டம் நடந்து கொண்டிருக்கலாம். இந்த இருவர் கூட்டணி மேற்கொள்ளும் தந்திரமான செயல்களால், நாடாளுமன்றம் பெருமளவில் பலவீனமடைந்து வருகிறது. இதன் மூலம் இவர்களின் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.