தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவில் மேடையில் சுருண்டு விழுந்தாரா சல்மான் கான்?: பகிரங்க விளக்கம் அளித்து மன்னிப்பு கோரினார்
தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவில் மேடையில் சுருண்டு விழுந்தாரா சல்மான் கான்?: பகிரங்க விளக்கம் அளித்து மன்னிப்பு கோரினார்
மும்பை: நடிகர் சல்மான்கான் ரியாலிட்டி ஷோ மேடையில் திடீரென உடல்நலக்குறைவால் அவதிப்படுவது போன்ற வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அது வெறும் நடிப்புதான் என அவர் பகிரங்க விளக்கம் அளித்துள்ளார். பாலிவுட் நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்கி வரும் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவில், சமூக வலைதள உருவக் கேலி குறித்து காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது பெண்களின் உடல் எடையை கிண்டல் செய்வோருக்கு கடும் கண்டனம் தெரிவித்த சல்மான்கான், ஆவேசமடைந்து தனது சட்டையைக் கழற்றி உடற்கட்டைக் காட்டியது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.
அதைத் தொடர்ந்து, நிகழ்ச்சியின் போட்டியாளர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது, சல்மான்கானுக்கு திடீரென கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டு, தண்ணீர் கேட்டு மேடையில் சுருண்டு விழுவது போன்ற அடுத்த எபிசோடுக்கான விளம்பர முன்னோட்ட வீடியோ வெளியானது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவி, 15 போட்டியாளர்கள் முன்னிலையில் நடந்த இந்த சம்பவத்தால் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள சல்மான்கான், ‘இறைவனின் அருளால் எனது உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை. நலமாக உள்ளேன். போட்டியில் பங்கேற்ற காசி தவ்கீர் என்பவர் தனது உடல்நிலையை வைத்து போலியாக நாடகமாடி மற்றவர்களை ஏமாற்றியதால், அவருக்கு பாடம் புகட்டவே மேடையில் நான் அப்படி நடித்துக் காட்டினேன். ஆனால், இந்த வீடியோ காட்சியை தவறாக எடிட் செய்து விளம்பரப்படுத்தியதன் மூலம் தேவையில்லாத பதற்றம் உருவாகிவிட்டது. இதற்காக நிகழ்ச்சி தயாரிப்பு குழுவினர் சார்பில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த தெளிவான விளக்கத்தைத் தொடர்ந்து, ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.