📅 Monday, 10 August 2026 IST | ஆடி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 10, 2026 04:03 AM

தவெக அரசின் முதல் பட்ஜெட் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

தவெக அரசின் முதல் பட்ஜெட் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் பட்ஜெட், கடந்த 5ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் மரியவில்சன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தேர்தல் பிரசாரத்தின் போது, பொதுமக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை விஜய் அளித்திருந்தார். அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், 'பெண்களின் திருமணத்துக்கு 1 சவரன் தங்க நாணயமும், பட்டுச்சேலையும் அரசின் சார்பில் வழங்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு ஹெல்மெட்டுடன் நவீன சைக்கிள் வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு, 5 லட்சத்தில் இருந்து 7 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.

'குறிப்பிட்ட சில நோய்களுக்கான காப்பீடு, 10 லட்சத்தில் இருந்து 12 லட்சமாக அதிகரிக்கப்படும். சுய உதவிக் குழுக்களுக்கு முதலீட்டு மானியமாக, 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும். ஊரக வேலை திட்டத்தில் பணியாளர்களுக்கான வேலை நாட்கள், 150 நாட்களாக அதிகரிக்கப்படும்.

'ரேஷன் கடைகளில் பாக்கெட் கோதுமை மாவு வழங்கப்படும். அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு, தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்' என்பது உட்பட பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும், மாநிலத்தின் மொத்த வருவாய், 3.50 லட்சத்து 27 கோடி ரூபாய்; செலவு, 4 லட்சத்து 5,802 கோடி, வருவாய் பற்றாக்குறை, 55,775 கோடி என்றும், அரசின் நலத்திட்டங்கள் உள்ளிட்டவற்றை செயல்படுத்துவதற்காக, மூன்று மாதங்களில், 21,000 கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டுள்ளது என்றும் நிதித்துறை செயலர் தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில், முந்தைய தி.மு.க., அரசு செயல்படுத்திய பல திட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. அதனால், 'பழைய திட்டங்கள் மீது புதிய ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது' என, தி.மு.க., தலைவர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, 'மகளிர் உரிமைத்தொகை, 2,500 ரூபாயாக உயர்த்தப்படும், ஆண்டுக்கு ஆறு காஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்பது உட்பட, தேர்தல் நேரத்தில் அளித்த பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும், விவசாயிகளின் கடன் தள்ளுபடி குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை' என்றும், 'பள்ளி கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது' என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், அந்த அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட்டை, எதிர்க்கட்சிகள் விமர்சிப்பதும், 'மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை' என்று குறை கூறுவதும் வாடிக்கையானதே. அதுபோலவே தான், இம்முறையும் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன.

தமிழக அரசு கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளது. அதனால், முந்தைய அரசுகள் செயல்படுத்திய, மக்களுக்கு பலன் தரும் திட்டங்கள் தொடர வேண்டும்; அத்துடன் புதிதாக சில திட்டங்கள் அறிவிக்கப்பட வேண்டும். பயனற்ற திட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்ற எண்ணத்திலும், மாநிலத்தின் கடன் சுமை மேலும் அதிகரித்து விடக்கூடாது என்ற எண்ணத்திலும் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசு பொறுப்பேற்று மூன்று மாதங்களே ஆகிறது; நிதி அமைச்சரும் புதியவரே. அவற்றை எல்லாம் கணக்கில் கொண்டு பார்த்தால், கவர்ச்சி அறிவிப்புகள் அதிகம் இல்லாத, பயன் தரும் சில நல்ல அறிவிப்புகள் இடம் பெற்ற பட்ஜெட் என்றே சொல்லலாம்.

மாநிலத்தின் நிதி நிலைமையை மேம்படுத்த, த.வெ.க., அரசு பல சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனால், வரும் ஆண்டுகளில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை, முதல்வர் விஜய் அரசு நிறைவேற்றும் என நம்பலாம்.