Toxic Prashanth's Review
சென்னை: கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் டாக்சிக். இன்று தியேட்டர்களில் கோலாகலமாக படம் ரிலீஸாகியிருக்கிறது. பெரிய எதிர்பார்ப்போடு சென்ற ரசிகர்களுக்கு; படக்குழு பெருத்த ஏமாற்றத்தையே கொடுத்திருக்கிறது. இந்நிலையில் படம் பார்த்த திரை விமர்சகர் பிரசாந்த் தனது ட்விட்டர் விமர்சனத்தை வெளியிருக்கிறார்.
கேஜிஎஃப் திரைப்படம் யஷ்ஷின் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. அந்தப் படத்தின் இரண்டு பாகங்களுமே மெகா ப்ளாக் பஸ்டர் அடித்து; அவரை பான் இந்தியா ஹீரோவாக உயர்த்தியது. இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் அவரது ஸ்டிக்கர்களும், போஸ்டர்களும் ஒட்டப்பட்டிருக்கின்றன. மேலும், ஹிந்தியில் ராமாயணம் படத்தில் ராவணன் கேரக்டரையும் ஏற்றிருக்கிறார். அந்தப் படத்தின் மீதும் அவருக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் இருக்கிறது.
யஷ்ஷின் டாக்சிக்: அதற்கும் முன்னதாக யஷ்ஷும் அவரது ரசிகர்களும் எதிர்பார்த்தது டாக்சிக் படத்தை. நடிகை கீது மோகன்தாஸ் இயக்கியிருக்கும் இப்படத்தில் அவருடன் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. நீண்ட நாட்களாக இந்தப் படத்தின் பணிகள் நடந்துவந்தன. எக்கச்சக்கமாக ஹைப்பும் ஏற்ற்பட்டது. இந்தியாவின் பல மாநிலங்களில் ப்ரோமோஷன் பணிகள் எல்லாம் பரபரத்தன. நடிகை நயன்தாராவும்கூட தனது கொள்கையை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு இந்தப் படத்துக்காக மேடை ஏறினார்.
இன்று ரிலீஸ்: இப்படி எக்கச்சக்க ஹைப்போடு தியேட்டர்களில் படம் இன்று ரிலீஸாகியிருக்கிறது. தங்களுக்கு இன்னொரு கேஜிஎஃப் கிடைக்கப்போகிறது என்ற ஆவலோடு ரசிகர்கள் படம் பார்க்க சென்றார்கள். யஷ்ஷின் ரசிகர்கள் தியேட்டர்களை திருவிழா கோலம் பூண வைத்துவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அனைவருமே ராக்கி பாய் ராக்கி பாய் என ஒருமித்த குரலில் பல தியேட்டர்களில் கத்தி தீர்த்துவிட்டார்கள்.
எப்படி இருக்கு படம்?: அவரது ரசிகர்களுக்கு படம் திருப்திதான். ரொம்பவே கொண்டாட்டமான மனநிலையில்தான் படத்தை அணுகினார்கள். ஆனால் மற்றவர்களுக்கு படம் பெருத்த ஏமாற்றம்தான். கேஜிஎஃப் ஃப்ளேவரில் இன்னொரு படத்தை கொடுத்துவிட்டார்; பழைய கதை, திரைக்கதை என அக்கு வேறாக ஆணி வேறாக பிரித்து போட்டு விளாசிவருகிறார்கள். கீது மோகன்தாஸ் ஹீரோயிசத்தை மட்டுமே நம்பிவிட்டார்; அது காப்பாற்றாது என்பதை இனியாவது உணர வேண்டும் என அட்வைஸும் செய்கிறார்கள்.
பிரசாந்த் ட்விட்டர் விமர்சனம்: இந்நிலையில் பிரபல திரை விமர்சகரான பிரசாந்த் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் டாக்சிக் படம் குறித்த சில வரி விமர்சனத்தை பகிர்ந்திருக்கிறார். ஒரு ட்வீட்டில், "கேஜிஎஃப் ஹேங் ஓவரிலிருந்து வெளியே வந்து ஒரு நல்ல படத்தை பற்றி யஷ் யோசிப்பார் என்று நம்புகிறேன். சும்மா ஸ்லோ மோஷைல் நடப்பதும், எந்தக் காரணமும் இல்லாமல் ஆட்களை வெட்டி கொலை செய்வதுமாக இருக்கிறது. யஷ், இதைவிட சிறப்பாக நீங்கள் செய்ய முடியும்.முதல் பாதியே முழு படத்தை பார்த்தது போன்ற உணர்வை கொடுக்கிறது" என குறிப்பிட்டிருக்கிறார்.
இன்னொரு ட்வீட்டிலும் அடி: அதேபோல் மற்றொரு ட்வீட்டில், "டாக்சிக் இடைவேளை.. இதெல்லாம் வெப் சீரிஸில்தான் வர வேண்டும். பின்னணி இசை என்ற பெயரில் Sound Pollution. அளவுக்கு அதிகமான ஹீரோயிசம், கெட்டியா ஜட்டிய காயப்போடுகிறார்கள் போன்ற வசனங்கள். அனைத்து விதத்திலும் வெறுமையாக இருக்கிறது" என்று கழுவி கழுவி ஊற்றியிருக்கிறார்.