📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News June 23, 2026 02:02 AM

ஊதியம் வழங்காததால் தவிப்பு; கோயில் பாதை ஆக்கிரமிப்பு: குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் புகார்

ஊதியம் வழங்காததால் தவிப்பு; கோயில் பாதை ஆக்கிரமிப்பு: குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் புகார்

திண்டுக்கல்: ''ஏப்ரல், மே மாத ஊதியம் வழங்காததால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறோம்'' என குறைதீர் கூட்டத்தில் மக்களை தேடி மருத்துவ திட்ட ஊழியர்கள் கலெக்டர் துர்காவிடம் மனு அளித்தனர்.

கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் துர்கா தலைமையில் நடந்தது. டி.ஆர்.ஓ., ஜெயபாரதி முன்னிலை வகித்தார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெயந்தி, சமூக பாதுகாப்பு திட்ட மாவட்ட அலுவலர் ஹென்றிபீட்டர், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ராஜா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேல், அனைத்துத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர். மொத்தம் 461 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. நான்கு மாற்றுத்திறனாளிகளுக்கு ஊன்றுகோல்கள், காதொலி கருவிகளை கலெக்டர் வழங்கி கோரிக்கை மனுக்களை பெற்றார்.

பணி நிரந்தரம் செய்ய வேண்டும்

மக்களைத் தேடி மருத்துவ திட்ட ஊழியர்கள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட தலைவர் ஸ்டெல்லா ரோஸ்லின்மேரி தலைமையில் ஊழியர்கள் வழங்கிய மனுவில், 'மாவட்டத்தில் மொத்தம் 360 பேர் பணிபுரிகிறோம். எட்டுமணி நேரம் தினசரி பணி என்பது சுமையாக மாறிவிட்டது. மாதந்தோறும் ஊதியம் ரூ.5500 வழங்கப்படுகிறது. அது குடும்பத்தை நடந்த போதுமானதாக இல்லை. பணிக்கு செல்லும் பல இடங்களில் பாதுகாப்பு இல்லை. ஏப்ரல், மே மாத ஊதியம் இன்னும் வழங்கப்படாததால் சிரமங்களை சந்தித்து வருகிறோம். அரசு எங்களை பணி நிரந்தரம் செய்து ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்' என கூறியிருந்தனர்.

கோயில் பாதை ஆக்கிரமிப்பு

திண்டுக்கல் கிழக்கு தாலுகா வேட்டைகாரன்புதுார் ஊர்மக்கள் வழங்கிய மனுவில், 'எங்கள் குடியிருப்பு பகுதிக்கு செல்லும் பாதையையும், வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான பாதையையும் ஆக்கிரமித்து இடையூறு ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பாதையை மீட்டுத்தர வேண்டும்'' என கூறப்பட்டிருந்தது.

வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை

கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சி குருசாமிபள்ளம் மலை கிராம மக்கள் வழங்கிய மனுவில், 'நாங்கள் தினக்கூலிகள், விதவைகள். அரசு புறம்போக்கு நிலத்தில் தகர செட்டில் வசித்து வருகிறோம். எங்களுக்கு வேறு நிலமோ, வீடோ இல்லாமல் தவித்து வருகிறோம். இதனால் தகர செட் வீட்டிற்கு பட்டா வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியிருந்தனர்.

'வாட்ஸ் ஆப்'பில் புகார் அளிக்க ஏற்பாடு

கலெக்டர் துர்கா கூறுகையில், 'மாவட்ட நிர்வாகத்தில் பொதுமக்கள் தங்களது புகார்களை 75988 66000 என்ற வாட்ஸ்ஆப் செயலி வழியாகவும், 18004250047 என்ற கட்டணமில்லா எண்ணிலும் தெரிவிக்கலாம். உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.