வேளாண் பட்ஜெட் உரையை திருப்பதிக்கு கொண்டு சென்றது ஏன்?
வேளாண் பட்ஜெட் உரையை திருப்பதிக்கு கொண்டு சென்றது ஏன்? - சிரித்தபடி நழுவிச் சென்ற அமைச்சர்
தமிழக வேளாண் துறை அமைச்சர் வினோத், இரு தினங்களுக்கு முன்பு, வேளாண் பட்ஜெட் உரையின் நகலை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு எடுத்துச் சென்று வழிபட்டார்.
Published : August 2, 2026 at 10:10 PM IST
கும்பகோணம்: தமிழக வேளாண் பட்ஜெட் உரையின் நகலை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு எடுத்துச் சென்று வழிபட்டது ஏன் என்ற கேள்விக்கு அமைச்சர் வினோத் சிரித்தபடி பதில் அளிக்காமல் சென்றார்.
இந்நிலையில், கும்பகோணம் அருகே உள்ள வளையப்பேட்டையில் பழைய தேப்பெருமாநல்லூர் வாய்க்கால் தூர் வாரும் பணி, ரூபாய் 70 லட்சம் மதிப்பீட்டில், சிட்டி யூனியன் வங்கியின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக கடந்த வாரம் தேப்பெருமாநல்லூர் வாய்க்காலின் கிழக்கு பகுதியில் தூர்வாரும் பணி நடைபெற்றது. அதனை அடுத்து இன்று இரண்டாம் கட்டமாக அதே வாய்க்காலில் மேற்கு பகுதியில் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன. இது மாங்குடி, ஆலயடி, கரும்பாயிரம் பிள்ளையார் கோயில் வரை சுமார் எட்டு கிலோ மீட்டர் நீளம் கொண்டது.
இது, கடந்த 30 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல், மண் திட்டுக்கள், செடி, கொடிகள் நிறைந்து வாய்க்கால்கள் துர்ந்து போய் காவிரி ஆற்று நீர் கும்பகோணம் மாநகருக்குள் வர முடியாத சூழ்நிலை இருந்தது. அதே வேளையில் மழைக்காலங்களில் மழை நீர் வடிவதிலும் சிரமம் ஏற்பட்டது. எனவே மழைக்காலத்தில் பாதிப்பு ஏற்படக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது முக்கியத்துவம் கருதி தூர்வாரப்படுகிறது. இந்தப் பணிகளை, வேளாண் துறை அமைச்சர் வினோத், பார்வையிட்டு ஆய்வு செய்து, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அவரிடம், வேளாண் நிதிநிலை அறிக்கையை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு எடுத்துச் சென்று வழிபட்டது மரபு மீறிய செயல் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளதே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அமைச்சர் பதிலளிக்காமல் சிரித்தபடி, "நீங்கள் எல்லோரும் சாப்பிட்டீர்களா?" என கேட்டுக் கொண்டே அங்கிருந்து நழுவிச் சென்றார்.