விஜயகாந்த் மடியில் அமர வைத்து.. கேப்டன் பற்றி நினைவுகள் பகிர்ந்த கிங் காங்
சென்னை: கிங் காங்கின் மகளுக்கு சில மாதங்களுக்கு முன்புதான் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. அதில் திரைத்துறை பிரபலங்கள் மட்டுமின்றி தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். கிங் காங் இப்போது ஒரு பேத்திக்கு தாத்தாவாகவும் இருக்கிறார். இந்நிலையில் விஜயகாந்த் குறித்து ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.
கோலிவுட்டில் டாப் காமெடி நடிகர்களுடன் நடித்தவர் கிங் காங். வடிவேலு, விவேக் என பலருடன் காம்பினேஷன் போட்டிருக்கும் அவர் சோலோவாகவும் நன்றாகவே காமெடி செய்யகூடியவர். அவருக்கு இருக்கும் சில உடல்நல பிரச்னைகளை வைத்து; அவரெல்லாம் சினிமாவில் நீடிக்கவே முடியாது என்று பலரும் கூறினார்கள். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தனது திறமையை நம்பி வளர்ந்திருப்பவர் அவர்.
மற்ற மொழிகளிலும்: தமிழ் மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் நடித்தவர் கிங் காங். தெலுங்கு, ஹிந்தி என கலக்கிய அவர்; இப்போது படங்களில் அதிகம் நடிப்பதில்லை. அவர் பிற மொழிகளிலும் நடித்ததான் காரணமாக அந்தத் திரைத்துறையிலும் பழக்கம் அதிகம் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில்தான் தனது மகள் காதலித்தவரையே அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தார் கிங் காங்.
திருமண ஏற்பாடுகள் தடல் புடல்: மகளின் திருமணத்தை சிம்ப்பிளாக நடத்தலாம் என்று அவர் முடிவு செய்திருந்தாலும்; சில சூழ்நிலைகள் அவர் பலருக்கும் பத்திரிகை வைக்கும் நிலைமையை உண்டு செய்தது. அதன்படி தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி நடிகர்கள், இயக்குநர்கள் என பலருக்கும் மகளின் திருமண பத்திரிகை வைத்தார். இங்கு மட்டுமின்றி கன்னட திரையுலகத்தை சேர்ந்த சிவராஜ்குமாருக்கும் பத்திரிகை சென்றது குறிப்பிடத்தக்கது.
தாத்தாவான கிங் காங்: பத்திரிகை வைக்கப்பட்டவர்களில் ஸ்டாலின் உள்ளிட்டோர் வந்திருந்தார்கள். திருமணம் முடிந்த பிறகு நடிகர்கள் சிவகார்த்திகேயன், மன்சூர் அலிகான் உள்ளிட்டோரும் வீட்டுக்கு சென்று மணமக்களை வாழ்த்தினார்கள். திருமணம் முடிந்த கையோடு ஒரு மகளையும் பெற்றெடுத்தார் கிங் காங்கின் மகள். இந்நிலையில் விஜயகாந்த் குறித்து கிங் காங் ஒரு பேட்டியில் பேசியிருப்பது கவனத்தை ஈர்த்திருக்கிறது.
விஜயகாந்த் பற்றி: அவர் அளித்த பேட்டியில், "மன்சூர் அலிகான் வீட்டு திருமணத்துக்கு சென்றிருந்தேன். அனைத்து நடிகர்களும் வந்திருந்தார்கள். திடீரென்று ஒரு பரபரப்பு நிலவியது. விஜயகாந்த் வருவதாக சொன்னார்கள். அவரிடம் சென்று வணக்கம் வைத்துவிட்டு வந்துவிடலாம் என எண்ணி அதன்படியே செய்தேன். பக்கத்தில் போனவுடன் வாங்க, வாங்க என்று சொல்லி அவர் மடியில் என்னை தூக்கி அமர வைத்துக்கொண்டார். நைட் 11 மணிக்கெல்லாம் உங்கள் காமெடி பார்ப்பேன். கந்தசாமி படத்தில் நீ ஓட்டை பிரித்துக்கொண்டு வருவியே என்று அதை சொல்லி சொல்லி சிரித்தார். ரொம்ப எதார்த்தமான மனிதர்" என்றிருக்கிறார்.