📅 Thursday, 20 August 2026 IST | ஆவணி 4, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News August 20, 2026 07:00 PM

வணிகத்தை விரிவுபடுத்த சீனா,ஜப்பானுக்குச் செல்லும் சிலாங்கூர் சிறு,நடுத்தர தொழில்முனைவோர்

வணிகத்தை விரிவுபடுத்த சீனா,ஜப்பானுக்குச் செல்லும் சிலாங்கூர் சிறு,நடுத்தர தொழில்முனைவோர்

ஷா ஆலாம், ஆகஸ்ட் 20 - உள்ளூர் சிறு, நடுத்தர தொழில்முனைவர்களின் தயாரிப்புகளுக்கான சந்தை மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்காக, சிலாங்கூர் மாநில அரசு, வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் அவர்களை சீனா மற்றும் ஜப்பானுக்கு அழைத்துச் செல்லவிருக்கிறது.

தரமான தயாரிப்புகளைக் கொண்டுள்ள மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளில் கால்பதிக்கும் திறன் கொண்ட தொழில்முனைவோர் இத்திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் என தொழில்முனைவோர் துறைக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் முகமது நஜ்வான் ஹலிமி தெரிவித்தார்.

உள்ளூர் தொழில்முனைவோர் அதிக மதிப்புமிக்க வெளிநாட்டுச் சந்தைகளில் நுழைவதற்கு ஏதுவாக, சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகத்தின் (PKNS) அனைத்துலகத் தொடர்பை மாநில அரசு முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும்.

"இதுபோன்ற திட்டங்களின் மூலம் நாங்கள் ஏற்கனவே பல வெற்றிக் கதைகளைக் கண்டுள்ளோம். இதில் ஜப்பானில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களுக்குத் தங்களின் வாசனைத் திரவியப் பொருட்களை வெற்றிகரமாக ஏற்றுமதி செய்த சிலாங்கூர் தொழில்முனைவோரும் அடங்குவர்," என்று இன்று நடைபெற்ற 'பிஸ்மேட்ச் மெகா பிகேஎன்எஸ்' (BizMatch Mega PKNS) நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

முன்னதாக, இந்த 'பிஸ்மேட்ச் மெகா' நிகழ்ச்சி , சிலாங்கூரைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோருக்கு அரசு நிறுவனங்கள், வங்கிகள், நிதி வழங்குநர்கள் மற்றும் எஸ்எம்இ கார்ப் (SME Corp), மாரா (MARA) போன்ற கூட்டரசு அமைப்புகளின் பிரதிநிதிகளை நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது.

தொழில்முனைவோர் ஒவ்வோர் அமைப்புக்கும் தனித்தனியாகச் செல்ல வேண்டிய அவசியமின்றி, ஒரே இடத்தில் தங்களுக்குக் கிடைக்கக்கூடிய நிதியுதவிகள், ஊக்கத்தொகைகள் மற்றும் மானியங்களை ஆராய்ந்து பெறுவதற்காக 2023 முதல் பிகேஎன்எஸ் நிறுவனம் இந்நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.