வரலாறு படைத்தது வங்கதேசம்: ஆஸ்திரேலிய மண்ணில் முதல் டெஸ்ட் வெற்றி
டார்வின்: ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்டில் வெற்றி பெற்று வரலாறு படைத்தது வங்கதேசம். முதல் டெஸ்டில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள வங்கதேச அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் டார்வினில் நடந்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 198, வங்கதேசம் 426 ரன் எடுத்தன. மூன்றாம் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 161/4 ரன் எடுத்திருந்தது. கிரீன் (43), கேரி (19) அவுட்டாகாமல் இருந்தனர்.
கிரீன் சதம்: நான்காம் நாள் ஆட்டத்தில் 5வது விக்கெட்டுக்கு 56 ரன் சேர்த்த போது மெஹிதி ஹசன் மிராஸ் பந்தில் அலெக்ஸ் கேரி (30) அவுட்டானார். தொடர்ந்து மெஹிதி ஹசன் 'சுழலில்' வெப்ஸ்டர் (5), கேப்டன் கம்மின்ஸ் (8) சிக்கினர். தனிநபராக போராடிய கிரீன், டெஸ்ட் அரங்கில் தனது 3வது சதத்தை பதிவு செய்தார். இவர், 104 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்டார்க் (18), லியான் (15) நிலைக்கவில்லை.
ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 284 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. வங்கதேசம் சார்பில் மெஹிதி ஹசன் 5 விக்கெட் கைப்பற்றினார்.
சுலப வெற்றி: பின், 57 ரன் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணிக்கு தான்சித் ஹசன் (0) ஏமாற்றினார். பின் இணைந்த ஷாத்மன் இஸ்லாம், மோமினுல் ஹக் ஜோடி கைகொடுத்தது. வெப்ஸ்டர் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய மோமினுல் வெற்றியை உறுதி செய்தார்.
வங்கதேச அணி 2வது இன்னிங்சில் 57/1 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஷாத்மன் (25), மோமினுல் (30) அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸ்திரேலியா சார்பில் ஹேசல்வுட் ஒரு விக்கெட் வீழ்த்தினார். இரு இன்னிங்சிலும் சேர்த்து 9 விக்கெட் (6+3) கைப்பற்றிய வங்கதேசத்தின் ஹசன் மஹ்மூத், ஆட்ட நாயகன் விருது வென்றார்.
வங்கதேச அணி 1-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது டெஸ்ட், வரும் ஆக. 22ல் மக்காய் நகரில் துவங்குகிறது.
ஆஸ்திரேலிய மண்ணில் முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்த வங்கதேச அணி, இதற்கு முன் 2003ல் இங்கு விளையாடிய 2 டெஸ்டிலும் இன்னிங்ஸ் தோல்வியடைந்தது.
* இது, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வங்கதேச அணியின் 2வது டெஸ்ட் வெற்றி. இதற்கு முன், 2017ல் மிர்புர் டெஸ்டில் வென்றிருந்தது.
* டெஸ்ட் அரங்கில் மோதிய 7 போட்டியில், ஆஸ்திரேலியா 5, வங்கதேசம் 2ல் வென்றன.
குறைந்த டெஸ்டில்...
ஆஸ்திரேலிய மண்ணில் குறைந்த டெஸ்டில் முதல் வெற்றியை பதிவு செய்த அணியானது வங்கதேசம். இங்கு விளையாடிய 3வது டெஸ்டில் முதல் வெற்றியை பெற்றது. அடுத்த இரு இடங்களில் பாகிஸ்தான் (7 டெஸ்ட்), இந்தியா (12) அணிகள் உள்ளன.
சிறந்த வெற்றி