வடபழனி முருகன் கோயிலில் செப்.1 முதல் செல்போனுக்கு தடை
கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது செல்போன் களைத் தெற்கு கோபுரம் அருகே உள்ள பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை: சென்னையின் பிரசித்திபெற்ற ஆன்மிகத் தலங்களில் ஒன்றான வடபழனி முருகன் கோயிலுக்கு, தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், செவ்வாய்க்கிழமை மற்றும் விழா நாட்களில் ஆயிரக்கணக்கானோரும் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.
இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் முக்கியக் கோயில்களில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கவும், செல்போன் பயன்படுத்தவும் சமீபத்தில் தடை விதிக்கப்பட்டது. அதன்தொடர்ச்சியாக, வடபழனி முருகன் கோயிலிலும் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரவுள்ளன.
அதன்படி செப்.1-ம் தேதி முதல், வடபழனி முருகன் கோயிலுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது செல்போன்களைத் தெற்கு கோபுரம் அருகே உள்ள பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
அங்கு ரூ.5 கட்டணம் செலுத்தி டோக்கன் பெற்றுக்கொள்ள வேண்டும். தரிசனம் முடிந்தபின், டோக்கனைக் கொடுத்து செல்போனை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
தடையை மீறி கோயிலுக்குள் செல்போன் கொண்டு சென்றால், உடனடியாக செல்போன் பறிமுதல் செய்யப்படுவதோடு, அபராதமும் விதிக்கப்படும். இந்த புதிய நடைமுறைக்கு, பக்தர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் கோயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.