📅 Wednesday, 26 August 2026 IST | ஆவணி 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News August 26, 2026 07:05 PM

WCL 2026: உலக சாம்பியன்ஷிப் லெஜண்ட்ஸ் தொடர் எப்போது? எங்கு நடைபெறும்?

WCL 2026: உலக சாம்பியன்ஷிப் லெஜண்ட்ஸ் தொடர் எப்போது? எங்கு நடைபெறும்?

WCL 2026: உலக சாம்பியன்ஷிப் லெஜண்ட்ஸ் தொடர் எப்போது? எங்கு நடைபெறும்?

மும்பை: உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடரின் மூன்றாவது சீசன் முதன்முறையாக யுனைடெட் அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இதற்கு முந்தைய முதல் இரண்டு சீசன்களும் இங்கிலாந்தில் நடத்தப்பட்ட நிலையில், தற்போது இந்த லீக் போட்டி துபாய் மண்ணில் நடக்கிறது. இந்தப் போட்டிகள் அக்டோபர் 3ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இத்தொடரில் யுவராஜ் சிங், ஏபி டி வில்லியர்ஸ், டுவைன் பிராவோ, ஷாஹித் அப்ரிடி மற்றும் மொயீன் அலி உள்ளிட்ட முன்னணி முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் களம் காணுகின்றனர். இவர்களுடன், மூன்றாவது சீசனுக்கான புதிய ஸ்டார்களாக ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் மற்றும் வங்கதேசத்தின் முகமது மஹ்முதுல்லா ஆகியோரும் விளையாட ஒப்பந்தமாகியுள்ளனர்.

இந்த சீசனில் சர்வதேச பங்களிப்பை மேம்படுத்தும் வகையில், 'பங்களாதேஷ் சாம்பியன்ஸ்' அணியும் புதிதாக இணைந்துள்ளது. இதற்கு முந்தைய வரலாற்றைப் பார்க்கும்போது, முதல் சீசனின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணியை வீழ்த்தி இந்தியா சாம்பியன்ஸ் அணி கோப்பையைக் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது சீசனில், பாகிஸ்தான் அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணி பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பேசிய உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப்பின் நிறுவனரும், முதன்மைச் செயல் அதிகாரியுமான ஹர்ஷித் தோமர் "மூன்றாவது சீசன் மிகவும் பிரம்மாண்டமாக அமையப் போகிறது. WCL தொடரை முதன்முறையாக யுஏஇ-க்கு கொண்டு செல்வதன் மூலம் ரசிகர்களுக்கு இதற்கு முன் பார்த்திராத ஒரு சிறந்த அனுபவத்தை வழங்கவுள்ளோம். கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய நட்சத்திரங்கள் இந்த சீசனில் பங்கேற்பதோடு, பல ஆச்சரியங்களும் காத்திருக்கின்றன. இது எங்கள் வரலாற்றிலேயே மிகப்பெரிய சீசனாக இருக்கும்" என்று தெரிவித்தார்.

இத்தொடரின் இணை உரிமையாளரான நடிகர் அஜய் தேவ்கன் "WCL என்பது வெறும் கிரிக்கெட் லீக் மட்டுமல்ல. இது உணர்ச்சிகள், பழைய நினைவுகள் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவை ஒரே மேடையில் இணையும் ஒரு தளமாகும். இந்த மூன்றாவது சீசனை மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கிறோம்" என்றார். கடந்த முறை பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை இந்திய அணி விளையாடாமல் புறக்கணித்தது. இதனால் இம்முறை போட்டி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.