யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிக்க வகை செய்யும் மசோதா நிறைவேற்றம்
மக்களவையில் நேற்று கடும் அமளிக்கு நடுவே வரி விதிப்பு மற்றும் இதர சட்டங்கள் (திருத்த) மசோதா 2026 நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா குறித்து பொருளாதார நிபுணர்கள் கூறியதாவது: அதிக அளவில் அந்நிய முதலீடுகளை ஈர்க்க புதிய மசோதாவில் பல்வேறு விதிகள் எளிமையாக்கப்பட்டு உள்ளன. மேலும் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் ஆலைகளை அமைக்க பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு உள்ளன.
குறிப்பாக மொபைல் போன், கணினி, லேப்டாப், சர்வர்கள் உள்ளிட்ட மின்னணு உற்பத்தி சார்ந்த ஆலைகள் அமைக்க வரிச் சலுகைகள் அளிக்கப்பட உள்ளன. இதன்மூலம் உலகின் மின்னணு பொருட்கள் உற்பத்தி சந்தையாக இந்தியா உருவெடுக்கும்.
மேலும் தற்போதைய சட்ட விதிகளின்படி ஆர்டிஜிஎஸ், என்இஎப்டி பணப் பரிமாற்றங்களுக்கு மட்டுமே வங்கிகள் கட்டணம் விதிக்கின்றன. புதிய மசோதாவின்படி இனி யுபிஐ, ரூபே கார்டு பணப் பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் விதிக்கப்படும். இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு இருக்காது. காய்கறி, பால் வாங்குவது உள்ளிட்ட அன்றாட செலவுகளுக்கான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்படாது. மிகப்பெரிய வணிக நிறுவனங்களுக்கு மட்டுமே கட்டணம் விதிக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.