ராமர் கோயில் காணிக்கை திருட்டு: எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் முடக்கம்
புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று முடங்கின. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20-ம் தேதி தொடங்கியது. நீட் வினாத்தாள் கசிவு, மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி, அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி மழைக்கால கூட்டத் தொடரை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முடக்கி வருகின்றன.
இந்த சூழலில் நேற்று காலை 11 மணிக்கு மக்களவை கூடியது. அப்போது கடந்த 1945-ம் ஆண்டு ஜப்பானின் ஹிரோஷிமாவில் நடத்தப்பட்ட அணு குண்டு தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். கடந்த ஜூலை 20-ம் தேதி நாடாளுமன்றம் நோக்கி நடந்த பேரணியின்போது மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவையில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். கடும் அமளியால் பிற்பகல் 2 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் அவை கூடியபோது எதிர்க்கட்சி எம்பிக்கள் வழக்கம்போல அமளியில் ஈடுபட்டனர். கடும் அமளிக்கு நடுவே வரி விதிப்பு மற்றும் இதர சட்டங்கள் (திருத்த) மசோதா 2026-ஐ மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த மசோதா விவாதம் இன்றி நிறைவேற்றப்பட்டது. இதன்பிறகு தொடர் அமளி காரணமாக நாள் முழுவதும் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவை நேற்று காலை 11 மணிக்கு கூடியது. அப்போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசும்போது, “மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அவையில் விளக்கம் வேண்டும்” என்றார். இதற்கு நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, “மாநிலங்களவைக்கு குறிப்பிட்ட துறையின் அமைச்சர் வர வேண்டும் என்று கார்கே உத்தரவிட முடியாது” என்றார்.
இந்த விவகாரத்தால் எதிர்க்கட்சி, ஆளும் கட்சி எம்பிக்கள் பரஸ்பரம் கோஷமிட்டனர். இதனால் பிற்பகல் 2.15 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் மாநிலங்களவை கூடியபோது எதிர்க்கட்சி எம்பிக்கள் கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் தலைவர் கார்கே கூறும்போது, “மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆணவத்துடன் செயல்படுகிறார். மாணவர்கள் மீது பெல்லட் குண்டுகளை பயன்படுத்தியது குறித்து அவர் விளக்கம் அளிக்க வேண்டும்” என்றார். கடும் அமளியால் மாநிலங்களவை ஒரு மணி நேரம் ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியபோது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதி ஒதுக்கீடு (எண் 3) மசோதா 2006 குறித்து பேசினார்.
பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மூலம் மத்திய அரசின் கூடுதல் செலவினங்களுக்காக ரூ.54,067 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னர் மாலை 5 மணி அளவில் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.