📅 Sunday, 23 August 2026 IST | ஆவணி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sri Lanka August 23, 2026 04:04 PM

3 வருடங்களுக்குப் பிறகு வெளிநாட்டில் தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி

3 வருடங்களுக்குப் பிறகு வெளிநாட்டில் தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி

இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில்

கொழும்பு: இலங்கை - இந்​தியா அணி​கள் இடையி​லான 2-வது மற்​றும் கடைசி டெஸ்ட் கொழும்பு நகரில் உள்ள சிங்​களீஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்​தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்​கு​கிறது.

ஷுப்​மன் கில் தலை​மையி​லான இந்​திய கிரிக்​கெட் அணி, இலங்​கை​யில் சுற்​றுப்​பயணம் செய்து விளை​யாடி வரு​கிறது. இரு அணி​கள் இடையி​லான 2 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் காலே மைதானத்​தில் நடை​பெற்ற முதல் போட்​டி​யில் இந்​திய அணி 165 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது.

இதனால் தொடரில் இந்​திய அணி 1-0 என முன்​னிலை வகிக்​கிறது. இந்​நிலை​யில் 2-வது மற்​றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பு நகரில் உள்ள சிங்​களீஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்​தில் இன்று தொடங்​கு​கிறது.

இந்​திய அணி கடைசி​யாக கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் மண்​ணில் டெஸ்ட் தொடரை வென்​றிருந்​தது. அதன் பின்​னர் இந்​திய அணி ஆஸ்​திரேலிய மண்​ணில் டெஸ்ட் தொடரை இழந்​திருந்​தது. அதேவேளை​யில் தென் ஆப்​பிரிக்​கா, இங்​கிலாந்​தில் நடை​பெற்ற டெஸ்ட் தொடரை சமன் செய்​திருந்​தது.

தொடர்ந்து தனது சொந்த மண்​ணில் நடை​பெற்ற நியூஸிலாந்​து, தென் ஆப்​பிரிக்கா அணி​களுக்கு எதி​ரான டெஸ்ட் தொடரை முழு​மை​யாக பறி​கொடுத்து இருந்​தது இந்​திய அணி. இந்த தோல்வி​கள் இந்​திய அணி​யின் பிம்​பத்தை வெகு​வாக பாதித்து இருந்​தது.

எனினும் கடந்த வாரம் காலே டெஸ்ட் போட்​டி​யில் இலங்கை அணியை 165 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்​த்​தி​யதன் வாயி​லாக ஷுப்​மன் கில் தலை​மையி​லான இந்​திய அணி சுழற்​பந்து வீச்சு ஆடு​களத்​தில் தன்​னம்​பிக்​கையை மீட்​டெடுத்​தது. மேலும் அணி​யின் மீதான அழுத்​தத்​தை​யும் வெகு​வாக குறைத்​தது.

முதல் டெஸ்ட் வெற்​றி​யின் மகிழ்ச்சி ஒரு​புறம் இருந்​தா​லும், கேப்டன் ஷுப்​மன் கில், தொடக்க வீர​ரான யஷஸ்வி ஜெய்​ஸ்​வால் ஆகியோர் பெரிய அளவில் ரன்​கள் சேர்க்​கத் தவறினர். கடந்த 6 இன்​னிங்​ஸ்​களில் 2 சதங்​களை விளாசி​யுள்ள ஷுப்​மன் கில் சிறந்த ஃபார்​மில் இருப்​பது போலத் தோன்​றும். ஆனால், சற்று உற்​று​நோக்​கி​னால் அவரது ஆட்​டத்​தில் பலவீனம் தென்​படும். இடதுகை சுழற்​பந்து வீச்​சாளர்​களின் பந்​துகளில் அவர், தொடர்ச்​சி​யாக ஒரே பாணி​யில் ஆட்​ட​மிழந்து வரு​வது கவலை​யளிக்​கும் வித​மாக உள்​ளது.

காலே டெஸ்​டிலும் ஷுப்​மன் கில் இரு இன்​னிங்​ஸ்​களி​லுமே பிர​பாத் ஜெயசூரி​யா​வின் பந்​து​வீச்​சில் ஆட்​ட​மிழந்​தார். இந்த விஷ​யத்​தில் கூடு​தல் கவனம் செலுத்​தும் வித​மாக பயிற்​சி​யின் போது இடதுகை சுழற்​பந்து வீச்​சாளர்​களுக்கு எதி​ராக அதிக நேரம் பேட்​டிங் செய்​துள்​ளார் ஷுப்​மன் கில். இதற்கு கொழும்பு டெஸ்ட் போட்​டி​யில் பலன் கிடைக்​கக்​கூடும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. மேலும், தனது தலை​மை​யில் வெளி​நாட்டு மண்​ணில் முதல் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்​டும் என்ற சவாலும் ஷுப்​மன் கில்​லின் முன் உள்​ளது.

இந்த இரு இலக்​கு​களை​யும் ஷுப்​மன் கில் ஒரே நேரத்​தில் சாதித்​துக் காட்​டும் பட்​சத்​தில், சிங்​களீஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்​தில் இந்​திய அணி​யின் வெற்​றியைத் தடுப்​பது இலங்கை அணிக்கு கடின​மான ஒன்​றாகவே இருக்​கும். யஷஸ்வி ஜெய்​ஸ்​வாலின் பிரச்​சினை சற்று ஆழமானது. கடந்த ஆண்டு டெல்​லி​யில் மேற்​கிந்​தி​யத் தீவு​களுக்கு எதி​ராகச் சதம் விளாசிய பிறகு, ஜெய்​ஸ்​வால் தனது கடந்த 8 இன்​னிங்​ஸ்​களில் ஒரே ஒரு அரைசதத்தை மட்​டுமே எடுத்​துள்​ளார்.

சுழற்​பந்து வீச்​சாளர்​களுக்கு எதி​ராக ஷுப்​மன் கில் திணறு​வது போல, வேகப்​பந்து வீச்​சாளர்​களின் பந்​துகளில் ‘கட்’ அல்​லது ‘சிப்’ ஷாட்​களை விளை​யாட முயன்று ஆட்​ட​மிழப்​பதை ஜெய்​ஸ்​வால் வழக்​க​மாக்​கிக் கொண்டு வரு​வது கவலை​யளிக்​கும் விஷய​மாக உரு​வெடுத்​துள்​ளது.

காலே டெஸ்ட் போட்​டி​யின் முதல் இன்​னிங்​ஸில் ரன் அவுட் ஆன ஜெய்​ஸ்​வால், 2-வது இன்​னிங்​ஸில் அசிதா பெர்​னாண்டோ வீசிய ஷார்ட்​பிட்ச் பந்தை ‘கட்’ செய்ய முயன்றபோது விக்​கெட் கீப்​பர் நிரோஷன் திக்​வெல்​லா​விடம் கேட்ச் கொடுத்து ஆட்​ட​மிழந்​தார்.தனது ஆட்​டத்​தில் உள்ள இந்​தத் குறையைச் சரிசெய்​வதற்​காக வலைப்​ப​யிற்​சி​யில் ஜெய்​ஸ்​வால் கூடு​தல் நேரம் செலவிட்டார்.

இந்​திய வேகப்​பந்து வீச்​சாளர்​களும் பந்​து​வீச்​சுப் பயிற்​சி​யாளர் மோர்னே மோர்​கலும் ஆஃப்​-ஸ்​டெம்​புக்கு வெளியே அதே லைனில் தொடர்ச்​சி​யாகப் பந்​துகளை வீசி, ‘பா​யிண்ட்’ திசை​யில் ‘கட்’ அல்​லது ‘சிப்’ ஷாட் ஆட ஜெய்​ஸ்​வாலுக்கு வலை விரித்​துப் பயிற்சி அளித்​தனர்.

இந்த சவாலைச் சிறப்​பாக எதிர்​கொண்ட ஜெய்​ஸ்​வால், ஆஃப்​-ஸ்​டெம்​புக்கு வெளியே சென்ற பந்​துகளை அடிக்க முயற்​சிக்​காமல் கவன​மாக விட்டு விளை​யாடி​னார். போட்​டிக் களத்​தி​லும் இதே கட்​டுப்​பாட்டை அவரால் வெளிப்​படுத்த முடிந்​தால், அவரிட​மிருந்து பெரிய இன்​னிங்ஸ் வெளிப்​படக்​கூடும்.

பந்து வீச்சை பொறுத்​தவரை​யில் முதல் டெஸ்​டில் 25 ஓவர்​கள் வீசி 1 விக்​கெட் மட்​டுமே வீழ்த்​திய சுழற்​பந்து வீச்​சாளர் குல்​தீப் யாத​வின் செயல்​பாடு ஏமாற்​றம் அளிப்​ப​தாக இருந்​தது. இதனால் இலங்கை அணி​யின் இடதுகை பேட்​டர்​களைக் கட்​டுப்​படுத்த, அவருக்​குப் பதிலாக சரண்ஷ் ஜெயின் அணியில் சேர்க்​கப்பட வாய்ப்பு உள்​ளது. ஏனெனில் நேற்​றைய பயிற்​சியில் குல்​தீப் யாதவ் பங்​கேற்​க​வில்​லை.

தனஞ்​ஜெயா டி சில்வா தலை​மையி​லான இலங்கை அணி​யில் அனுபவம் இல்​லாத வீரர்​கள் அதி​கம் இடம் பெற்​றுள்​ளனர். பேட்​டிங்​கில் டாப் ஆர்டரில் அதிரடி ஷாட்​களை விளை​யாடி ஆட்​ட​மிழப்​ப​தைத் தவிர்த்​து, களத்​தில் அதிக நேரம் நிலைத்து நின்று விளை​யாடு​வ​தில் அந்த அணி கவனம் செலுத்த முயற்​சிக்​கக்​கூடும். ஃபார்​மில் இருக்​கும் கமில் மிஷா​ரா, சுழற்​பந்து வீச்​சு ஆல்​ர​வுண்​டர்​ சஹான்​ அரச்​சிகே ஆகியோரின்​ வரு​கை அணிக்​கு பலம்​ சேர்​க்​கக்​கூடும்.

4-வது இடம் பிடிக்க வாய்ப்பு

​கொழும்பு டெஸ்​டிலும் வெற்றி பெற்று இந்​திய அணி 2-0 என தொடரை முழு​மை​யாகக் கைப்​பற்​றி​னால், ஐசிசி உலக டெஸ்ட் சாம்​பியன்​ஷிப் புள்​ளி​கள் பட்​டியலில் 57.58 சதவீதத்​துடன் ஒரு இடம் முன்​னேறி 4-வது இடத்​தைப் பிடிக்க வாய்ப்​புள்​ளது. ஏனெனில் டார்​வின் டெஸ்ட் போட்டி வெற்​றிக்​குப் பிறகு உலக டெஸ்ட் சாம்​பியன்​ஷிப் புள்​ளி​கள் பட்​டியலில் 66.67 சதவீதத்​துடன் 4-வது இடத்​தில் இருக்​கும் வங்​கதேச அணி, மெக்​கே​யில் நடை​பெற்று வரும் ஆஸ்​திரேலி​யா​வுக்கு எதி​ரான 2-வது டெஸ்​டில் தோல்​வியடைந்​தால் 55.56 சதவீதத்​துடன் 5-வது இடத்​துக்கு தள்​ளப்பட வாய்ப்​புள்​ளது.