📅 Wednesday, 02 September 2026 IST | ஆவணி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business September 02, 2026 08:04 AM

35,000+ புகார்கள்... ரூ1,500 கோடி+ மோசடி!

35,000+ புகார்கள்... ரூ1,500 கோடி+ மோசடி!

35,000+ புகார்கள்... ரூ1,500 கோடி+ மோசடி! - மேலூரை தகிக்கவைக்கும் சதுரங்க வேட்டை!

ரஞ்சித்தின் உறவினர்களான அருண், அனிதா உள்ளிட்டோர் இந்த ஆப் குறித்து எங்களுக்கு அறிமுகப்படுத்தினர். ரூ.54,000 கொடுத்தால், அதில் ரூ.50,000-ஐ டாலராக மாற்றி, செயலியில் முதலீடு செய்வார்கள். மீதிப் பணத்தை கமிஷனாக எடுத்துக்கொள்வார்கள்

“ஒருத்தனை ஏமாத்தணும்னா அவனோட ஆசையைத் தூண்டணும்!” - ‘சதுரங்க வேட்டை’ திரைப்படத்தில் இடம்பெற்ற பிரபல வசனம் இது. அப்படி மக்களின் ஆசையைத் தூண்டி 1,500 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி நடைபெற்றிருப்பதாக மதுரை மேலூர் வட்டாரமே பரபரத்துக் கிடக்கிறது.

எஃப்.க்யூ.எல் (FQL) என்ற செயலியில் முதலீடு செய்தால் 40 நாள்களில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் எனக் கூறி, மக்களை வலையில் விழவைத்திருக்கிறார்கள். மேலூர் வேப்படப்பு பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் உள்ளிட்டோர் இந்த முதலீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். ரஞ்சித் தலைமறைவாக இருக்கும் நிலையில், அனிதா, பூபதி, ரமேஷ் உள்ளிட்ட 20 பேர்மீது வழக்கு பதியப்பட்டு, கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலூர், அலங்காநல்லூர், சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 35 ஆயிரம் பேர் இதுவரை புகாரளித்திருக்கிறார்கள்.

இதில் 9 லெவல்கள் இருந்தன. புதிய நபர்களை இணைத்தால் கமிஷன், போனஸ் டாலர் கிடைக்கும். அதிக நபர்களைச் சேர்ப்பவர்களுக்கு தங்க நாணயம், கார், பைக் உள்ளிட்ட பரிசுகளும் வழங்கப்படும் என்றார்கள். ஆரம்பத்தில் சிலருக்குப் பணம் கிடைத்தது. அந்த லாபத்தை வைத்து கார், பைக், வீடு, நிலம் வாங்கியதாக வாட்ஸ்-அப் குழுக்களில் பதிவிடப்பட்ட புகைப்படங்களையும் பார்த்து, பலர் அதிக அளவில் முதலீடு செய்தனர். சிலர் ரூ.10 லட்சம் வரை முதலீடு செய்திருக்கின்றனர்.

இதற்கிடையே, மூன்று மாதங்களுக்கு முன்பு வி.ஜி (VG) என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் 40 நாள்களில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என்றார்கள். கடந்த வாரம் திடீரென இரண்டு செயலிகளும் செயல்படாமல் போயின. பதறிப்போய் விசாரித்தபோது, தொழில்நுட்பக் கோளாறு என்று சொல்லிச் சமாளித்தார்கள். பிறகுதான் நாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது” என்றார்.

மற்றொரு பாதிக்கப்பட்ட நபரான வலசையைச் சேர்ந்த ஜெகதீஸ்வரி, “ரஞ்சித்தின் நண்பர் ரிச்சர்ட்டும், அவரின் மனைவி மியாவும் நிறுவனத்தை நடத்துவதாகவும், அவர்கள் அமெரிக்காவில் இருப்பதாகவும் கூறினர். ரிச்சர்ட் தினமும் இரவு ஜூம் மீட்டிங்கில் பேசுவார். நானும் ரூ.54,000 முதலீடு செய்தேன். செயலி முடங்கிய பிறகு, மேலும் ரூ.20,000 கொடுத்தால் முழுப் பணத்தையும் திருப்பித்தருவதாகக் கூறினர். எங்களிடம் அந்தப் பணம் இல்லாததால் அனிதா வீட்டின் முன்பு போராட்டம் நடத்தினோம். அதன் பின்னரே போலீஸார் புகாரளிக்கும்படி சொன்னார்கள்” என்றார்.

வேப்படப்பு பகுதியைச் சேர்ந்த ஆண்டிசாமி என்பவர் நம்மிடம், “மூன்று மாதங்களுக்கு முன்பு ரஞ்சித்தின் திருமணம் மிக கிராண்டாக நடந்தது. அதைப் பார்த்த போலீஸார் ‘இவ்வளவு பணம் எப்படி வந்தது?’ என்று ரஞ்சித்தை அழைத்து விசாரணை செய்துவிட்டு அனுப்பிவிட்டார்கள். அப்போதே இந்த ஆப் முறையாக நடக்கிறதா என்று விசாரணை செய்திருந்தால், ரஞ்சித் சிக்கியிருப்பார். இந்த எஃப்.க்யூ.எல் ஆப் கடந்த ஒன்றரை வருடமாகச் செயல்பட்டுவருகிறது. இதில் பல ஏஜென்ட்டுகள் இருக்கிறார்கள். அவர்களும் இந்த ஆப்பில் பணத்தை முதலீடு செய்து லாபம் பார்த்திருக்கிறார்கள். அவர்கள் புகார் கொடுக்கவே வரவில்லை. கடைசியாக ஆறு மாதங்களில் பணத்தை முதலீடு செய்து ஏமாந்தவர்கள் மட்டும்தான், இப்போது புகார் கொடுத்திருக்கிறார்கள். இந்தப் பணமே 1,500 கோடியைத் தாண்டும். மக்களுடைய பேராசைதான் இந்த மோசடிக்குக் காரணம்” என்றார்.

மேலூர் டி.எஸ்.பி சிவக்குமாரிடம் பேசியபோது, “எஃப்.க்யூ.எல் ஆப் குறித்து உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்ததும் சம்பந்தப்பட்டவரை அழைத்து விசாரணை நடத்தினோம். பின்னர் வழக்கு சைபர் க்ரைம் பிரிவுக்கு மாற்றப்பட்டு, அவர்கள் விசாரணை நடத்திவந்தனர்” என்றார்.

இது குறித்து அலங்காநல்லூர் டி.எஸ்.பி ஆனந்தராஜிடம் பேசினோம். ``இந்த வழக்கின் முக்கியப்புள்ளி ரஞ்சித்தான். ஆரம்பத்தில் சொந்தக்காரர்கள், ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களை மையமாகவைத்து இந்த மோசடியில் ஈடுபட்டிருக்கின்றனர். தற்போது பல மாவட்டங்களிலும் இந்த மோசடி நடந்திருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் இருப்பதால் காவல் நிலையத்தில் வைத்து புகார்களை வாங்க முடியாது. அதனால், தனியார் மண்டபங்களிலும், பள்ளிகளிலும் வைத்து புகார்களை வாங்கிவருகிறோம்” என்றார்.

புகார் அளிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால், மோசடித் தொகை இன்னும் உயரலாம்!