மிஸ்டர் கழுகு: முதல்வர் விஜய் சிறை விசிட்... பின்னணியில் ஜோதிடம்!
மிஸ்டர் கழுகு: முதல்வர் விஜய் சிறை விசிட்... பின்னணியில் ஜோதிடம்!
`ஏதாவது ஒரு வழக்கில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியைச் சிறையில் அடைக்கும் மூடில் இருப்பதால், முன்கூட்டியே சிறைக்கு விசிட் போய், சிறை நிலையைப் பார்த்து வந்தார் விஜய்’ என்றும் ஒரு தகவலைச் சொல்கிறார்கள்
“ ‘பிரதமர் விஜய்’ விவகாரத்தைக் கிளப்பிவிட்டு, பரந்தூர் தொடங்கி அரசுக்குச் சிக்கலை ஏற்படுத்திய அனைத்தையும் திசைதிருப்பிவிட்டார்கள்.. பலே வியூகம்தான்...” என யாரிடமோ போனில் பேசிக்கொண்டே அலுவலகத்துக்குள் நுழைந்தார் கழுகார். நாம் கொடுத்த தித்திப்பான ஹாட் சாக்லேட் மில்க்கை ருசித்தபடி, இந்த இதழுக்குத் தயாராகிக்கொண்டிருந்த செய்திகளுக்குள் பார்வையை ஓடவிட்டவர், ``சி-வோட்டர் கருத்துக்கணிப்பு குறித்து உமது நிருபர் கொடுத்திருக்கும் செய்தியில் இல்லாத விஷயத்தைச் சொல்கிறேன் கேளும்...’’ என்று உற்சாகமாகத் தொடங்கினார்.
“ஒருவர் பின் ஒருவராக, ‘விஜய்தான் அடுத்த பிரதமர்...’ என்று த.வெ.க அமைச்சர்கள் பேசிக் கொண்டிருப்பதால், கடும் அப்செட்டில் இருக்கிறது சத்தியமூர்த்தி பவன். ‘இதுபோல பேசிக்கொண்டிருந்தால் கூட்டணி உறவு பாதிக்கப்படும். உங்க ஆட்களுக்குக் கடிவாளம் போடுங்க...’ என்றாராம் காங்கிரஸ் எம்.பி பிரவீன் சக்கரவர்த்தி. அவரது பேச்சை பனையூரில் யாரும் காதிலேயே வாங்கிக்கொள்ளவில்லையாம். முதல்வருக்கு ஆலோசனை சொல்பவர்கள்கூட இப்போது பிரவீன் சக்கரவர்த்தியின் போனை எடுப்பதில்லை என்கிறார்கள். பொறுமையிழந்துதான், ‘ராகுலைப் பிரதமர் வேட்பாளராக ஏற்கவில்லை என்றால் அமைச்சர் பதவியிலிருந்து விலகுவோம்’ என்று ஆவேசமாகியிருக்கிறார் அமைச்சர் ராஜேஷ்குமார்.”
“இந்தக் களேபரத்துக்கு மத்தியில் கோட்டையில் முதல்வரைச் சந்தித்திருக்கிறாரே மாணிக்கம் தாகூர்?”
“ம்ம்... ‘கூட்டணிக் கட்சிகளுடன் வீண் சச்சரவு வேண்டாம். இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’ என பிரவீனுடன் சேர்ந்து விஜய்யிடம் சொல்லியிருக்கிறார் மாணிக்கம் தாகூர். முதல்வர் மெளனமாகக் கேட்டுக்கொண்டாராம். தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் நிவேதித் ஆல்வாவும் இந்த விவகாரத்தை சோனியா காந்தி, ராகுல் வரையில் கொண்டு சென்றிருக்கிறார். ‘பொறுமையாக இருங்கள். த.வெ.க-வுக்குள்ளேயே இருக்கும் புல்லுருவிகளை அவர்களே களையெடுக்கட்டும்...’ என்று பதில் வந்திருக்கிறதாம்.”
“தமிழ்நாடு ஆளுநராக ஆந்திர முன்னாள் முதல்வர் கிரண் குமார் ரெட்டியைக் கொண்டுவரும் முயற்சிகள் நடக்கின்றனவாமே... யார் பின்புலத்தில் இருக்கிறார்களாம்?”
“சாட்சாத் விஷ்ணு ரெட்டிதான். கிரண் குமார் ரெட்டியும் விஷ்ணு ரெட்டியும் தூரத்து உறவினர்களாம். ‘அவரைத் தமிழ்நாடு ஆளுநராகக் கொண்டுவந்துவிட்டால், முதல்வர் விஜய்க்கும், ஆளுநர் மாளிகைக்கும் இடையே பாலமாக இருக்கலாம். த.வெ.க ஆட்சியில் தன்னை வலுவாக்கிக்கொள்ளலாம்’ என்று தீர்மானித்து, காய்நகர்த்துகிறாராம் விஷ்ணு ரெட்டி. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் சிபாரிசு கேட்டு, அவர் மூலமாக டெல்லிக்கு இந்தக் கோரிக்கை போயிருக்கிறது.”
“காங்கிரஸ் கட்சியின் முதல்வராக இருந்த கிரண் குமார் ரெட்டி, தற்போது பா.ஜ.க-வில் இருக்கிறார். அவருமே தனக்கு ஆளுநர் பொறுப்பு கேட்டிருப்பதாலும், ‘காங்கிரஸ் கூட்டணியிலிருந்து த.வெ.க-வைப் பிரித்துவிடுவதை கிரண் குமார் ரெட்டி பார்த்துக்கொள்வார். த.வெ.க-வை பா.ஜ.க பக்கம் இழுத்து வரும் வேலையை விஷ்ணு ரெட்டி செய்துவிடுவார்...’ என்று ஹைதராபாத்திலிருந்து பலமான சிபாரிசுகள் சென்றிருப்பதாலும், விஷ்ணு ரெட்டியின் கோரிக்கை பரிசீலிக்கப்பட வாய்ப்பிருக்கிறதாம்.”
“பெயர் வேண்டாம். விவரத்தை மட்டும் சொல்கிறேன் கேளும். தலைநகரின் வணிக நிறுவனங்கள் அடர்ந்திருக்கும் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ அவர். சமீபத்தில் சர்ச்சைக்குள்ளான ஒற்றை எழுத்து நிறுவனத்தில், 1,000 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்திருந்தாராம். நிலங்களை விற்றுக் கிடைக்கும் வருமானத்தில் 30 சதவிகித லாபத்தைக் கொடுத்துவிடுவது ஒப்பந்தமாம். அவருடைய முதலீடு மொத்தத்துக்கும் நிலங்களை வாங்கிக்குவித்த ஒற்றை எழுத்து நிறுவனம், ‘ஒன்றும் போணியாகவில்லை. விற்றவுடன் பணம் தருகிறோம்’ என்று இப்போது கைவிரித்துவிட்டதாம்.”
“நீர் யாரைச் சொல்கிறீர் என்று புரிகிறது... அந்த முன்னாள் எம்.எல்.ஏ-விடம் சேலத்துக்காரரின் சேமிப்பும் இருந்ததே...”
“அதுவும் சேர்ந்துதான் ஒற்றை எழுத்து நிறுவனத்திடம் மாட்டியிருக்கிறது. அந்தக் கடுப்பில்தான், முன்னாள் எம்.எல்.ஏ-வை ஏறெடுத்தும் பார்ப்பதில்லையாம் சேலத்துக்காரர். பணத்தை செட்டில் செய்வதற்கு இரண்டு மாதங்கள் அவகாசம் கொடுத்திருக்கிறாராம். இதற்கு மேல் அவ்வை சண்முகம் சாலையில் இருப்பதில் பயனில்லை என்று முடிவெடுத்த முன்னாள் எம்.எல்.ஏ., தி.நகரில் நடந்த ஒரு திருமண வைபவத்தில் மாண்புமிகுக்கள் சிலரைச் சந்தித்து கட்சியில் சேர அனுமதி கேட்டிருக்கிறார். தான் இணைவதற்கு முட்டுக்கட்டை போடும் ஈரோடு சீனியரைச் சாந்தப்படுத்தவும் முயல்கிறார். எதுவும் பலனளிக்கவில்லை என்றால், அண்ணாசாலைப் பக்கம் ஒதுங்கலாம் எனவும் முடிவெடுத்துவிட்டாராம் முன்னாள் எம்.எல்.ஏ.”
“அமைச்சர் விக்னேஷ் கடும் நெருக்கடியில் இருக்கிறாராமே?”
“டாஸ்மாக் கடை ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த ‘மகாகவி’ பிரமுகரிடம் நடந்த பேச்சுவார்த்தையில், ‘பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்குவதை நிறுத்த முடியாது. மது பாட்டில்களை ஏற்றி, இறக்குவோருக்கான கூலி, உதவியாளர்களுக்கு மாதச் சம்பளம் எல்லாமே அதைவைத்துத்தான் செலவு செய்கிறோம். 10 ரூபாயை நிறுத்தச் சொல்லாதீர்கள்...’ என கட் அண்ட் ரைட்டாகச் சொல்லிவிட்டாராம். ஊதிய உயர்வு அறிவித்தும் பிரச்னை ஓயாததால், அமைச்சர் விக்னேஷ் பதற்றத்திலேயே இருக்கிறாராம்...” என்றவருக்கு ஃப்ரூட் சாலட் ஐஸ் க்ரீம் கொடுத்தோம். ருசித்தபடி ``புழல் சிறை தொடர்பான உமது செய்தியாளரின் கட்டுரையைத் தாண்டி என்னிடம் சில விஷயங்கள் இருக்கின்றன’’ என்று கண்சிமிட்டியபடி தொடர்ந்தார் கழுகார்.
“முதல்வருக்கு நெருக்கமான ஜோதிடப் புள்ளிகள், ‘சதய நட்சத்திரம் முதல்வரின் ராசிக்குப் பிரச்னையை உண்டாக்கப்போகிறது. இந்த ஆண்டு தமிழ்நாட்டில் பெருமழை பெய்யும். அது த.வெ.க அரசுக்குச் சிக்கல்களை ஏற்படுத்தும்’ என்று கணித்திருக்கிறார்கள். அதற்குப் பரிகாரமாக, ‘சிறையில் அமர்ந்து சிறை உணவைச் சாப்பிட வேண்டும்’ என்று ஜோதிடர்கள் ஆலோசனை சொல்ல, புழல் சிறைக்கு `விசிட்’ அடித்திருக்கிறார் முதல்வர் விஜய்.”
“அடேங்கப்பா...”
“பலே... பலே...”
“முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் தாயார் ருக்மணி, மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர்குழுத் தலைவராக இருக்கிறார். தி.மு.க ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட அறங்காவலர்குழு என்பதால், அவர்களுடைய பெயர்களை கும்பாபிஷேகப் பத்திரிகையில் போடக் கூடாது எனக் கறாராக உத்தரவு போட்டிருக்கிறாராம் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார். மேலும், அறங்காவலர் குழுவைக் கலைத்துவிட்டு, தன்னுடைய ஆதரவாளர்களை அமர்த்துவதற்கான வேலைகளைச் செய்துவருகிறாராம். இதற்கிடையே பத்திரிகையாளர்களைச் சந்தித்த நிர்மல் குமார், ‘தி.மு.க நிர்வாகிகளுக்கு அறங்காவலர்குழுவில் என்ன வேலை?’ என வெளிப்படையாகவே பேசி, சர்ச்சைத் தீயைப் பற்றவைத்துவிட்டார். இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு போட்டு, விசாரணைக்கு வந்திருக்கிறது...”
“என்னவெல்லாம் பிரச்னை பாருங்க...”
“அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் அண்ணன் தலைவர் களமிறங்கவிருக்கிறார் அல்லவா... நடந்து முடிந்த பொதுத்தேர்தலில், அந்தத் தொகுதியில் அண்ணன் கட்சி சார்பில் போட்டியிட்ட பிரமுகர், ‘நீங்கள் இங்கே போட்டியிட வேண்டாம்’ என அண்ணன் தலைவரிடம் சொல்லிப் பார்த்திருக்கிறார். அண்ணனிடமிருந்து சூடான பதில் வரவும், அப்செட்டான அந்தப் பிரமுகர் இப்போது கட்சியைவிட்டே விலகும் முடிவெடுத்துவிட்டாராம்.”
“தி.மு.க எம்.எல்.ஏ-க்களில், துரை. சந்திரசேகரன், முத்துராஜா, ராஜா, பூண்டி கலைவாணன் உள்ளிட்டவர்கள் சட்டமன்றத்தில் அடித்து ஆடுகிறார்கள். ஆறாவது முறையாக எம்.எல்.ஏ-வாக இருக்கும் துரை. சந்திரசேகரனுக்கு அமைச்சராக முடியவில்லையே என்கிற வருத்தம் அதிகமாக உண்டு. கடந்த முறையும் சமூகரீதியாக வாய்ப்பு பறிபோனது. ‘இனி தலைமை நம்மைப் புறக்கணிக்க முடியாத அளவுக்கு விசுவாசத்தைக் காட்ட வேண்டும். கட்சிக்குள் தவிர்க்க முடியாத இடத்துக்கு வர வேண்டும்’ என முடிவெடுத்து, த.வெ.க-வை இறங்கி அடிக்கிறார்களாம்.”
“அது சரி... மலர்க் கட்சியில் ஏதாவது அப்டேட் இருக்கிறதா?”
“மலர்க் கட்சியின் கொங்கு தலைவி, மாநில உச்சப் பொறுப்பை எதிர்பார்த்து டெல்லியில் முகாமிட்டிருக்கிறாராம். ‘கணக்கு மேடம்’ ரூட்டில் மூவ் செய்வதால், கொங்கு தலைவியின் கோரிக்கைகள் நிறைவேறும் வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள்...” என்று சிறகுகளைப் படபடத்த கழுகார்,
“இந்த ஆண்டு இறுதிக்குள் த.வெ.க ஆட்சியைக் கலைத்துவிட வேண்டும் என வியூகம் அமைத்துத் திட்டமிடுகிறார்களாம் இரு கழகங்களின் மாஜிக்கள். ‘இந்த முறை ஸ்கெட்ச் மிஸ் ஆகக் கூடாது’ எனத் தீவிர ஆலோசனைகள் நடைபெறுகின்றன. உமது நிருபரை விசாரிக்கச் சொல்லும்...” என்றுவிட்டு சிறகுகளை அகல விரித்தார்.