ஆண் மருத்துவர்கள்.. பிரசவ வார்டில் நான் பட்ட வேதனை.. நடிகை ராதா பேட்டி!
சென்னை: 80களில் தமிழ் சினிமாவை தனது காந்த கண்களாலும் நடிப்பாலும் கட்டி போட்டவர் நடிகை ராதா. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, கார்த்திக், மோகன், சத்யராஜ் என அன்றைய முன்னணி நடிகர்கள் அனைவருடனும் இணைந்து பிளாக்பாஸ்டர் படங்களை கொடுத்து, ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர். தொழிலதிபர் ராஜசேகரன் நாயரைத் திருமணம் செய்துகொண்ட ராதாவிற்கு கார்த்திகா, துளசி என்ற இரு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். மகள்கள் இருவருமே சினிமாவில் கதாநாயகிகளாக அறிமுகமான போதிலும், தற்போது சொந்த தொழிலில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
நடிகை ராதா: இந்நிலையில், மதர்ஸ் டே சிறப்பு பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை ராதா, தனது முதல் பிரசவத்தின் போது அரசு மருத்துவமனையில் தனக்கு ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவங்களையும் பயத்தையும் மிக உருக்கமாக பேசி உள்ளார். நான், ஒன்பதாம் படித்துக்கொண்டு இருந்த போதே நடிக்க வந்து விட்டேன். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என அடுத்தடுத்து படங்களில் படு பிஸியாக இருந்தேன். திருமணத்திற்கு பிறகு தான் எனக்கு ஓய்வே கிடைத்தது.
பயந்தேன்: என் முதல் கர்ப்பத்தின் போது மிகவும் கஷ்டப்பட்டேன், எனக்கு என் அக்காவின் கர்ப்ப காலத்தையோ, அவர்கள் குழந்தையை எப்படி வளர்த்தார்கள் என்பதையோ பார்த்த அனுபவம் இல்லை. திடீரென குழந்தை பிறந்துவிடும், அதனால் குழந்தை பெற்றுக்கொள்வது ரொம்பவே சுலபமான விஷயம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், நான் கர்ப்பமான பிறகுதான் அதன் கஷ்டம் புரிந்தது. என் முதல் மகள் கார்த்திகா அரசு மருத்துவமனையில்தான் பிறந்தார். அப்போதெல்லாம் இப்போது இருப்பது போல வசதிகள் கிடையாது. ஒரே வார்டில் பல கர்ப்பிணி பெண்கள் அனுமதிக்கப்பட்டிருப்பார்கள்.
ஆண் மருத்துவர்கள்: என்னை சுற்றி இருந்த பெண்கள் பிரசவ வலியால் துடித்துக்கொண்டு சத்தமாகக் கத்துவதை பார்த்ததும் எனக்குப் பயம் இன்னும் அதிகமாகிவிட்டது. ஆனால், அங்கிருந்த மருத்துவர்கள், குறிப்பாக ஆண் மருத்துவர்கள், தொடர்ந்து என்னிடம் வந்து பயப்படாதீங்க, நாங்க இருக்கோம் என்று ஆறுதல் கூறி தைரியம் கொடுத்தார்கள். அவர்கள் காட்டிய அந்த அக்கறையும் ஆதரவும்தான் அந்த பயத்தை கடக்க உதவியது. அந்த நேரத்தில் அவர்கள் எனக்குக் கடவுள் போலத் தெரிந்தார்கள்.
குழந்தையை தூக்கவே பயந்தேன்: குழந்தை பிறந்த பிறகும் கார்த்திகாவை எப்படித் தூக்குவது, பராமரிப்பது என்று தெரியாமல் திணறினேன். என் அம்மாதான் கார்த்திகாவை என் கையில் எடுத்துக் கொடுப்பார்கள். அப்படித்தான் கொஞ்சம் கொஞ்சமாக பயம் போனது. இரண்டாவது குழந்தை (துளசி) பிறந்தபோது அனுபவம் வந்துவிட்டது. மூன்றாவதாக மகன் பிறந்தபோது எதையும் சமாளிக்கும் தைரியம் வந்துவிட்டது என ராதா அந்த பேட்டியில் பேசி உள்ளார்.