ஆண்டிரூ ரஸில் டி20 போட்டியில் மகத்தான சாதனை.. உலக அளவில் வெறும் 3வது வீரர் என்ற பெருமை
ஆண்டிரூ ரஸில் டி20 போட்டியில் மகத்தான சாதனை.. உலக அளவில் வெறும் 3வது வீரர் என்ற பெருமை
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் ஆண்ட்ரே ரசல், டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமான ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளார். கரீபியன் பிரீமியர் லீக் சிபிஎல் தொடரில் ஜமைக்கா கிங்ஸ்மென் அணிக்காக விளையாடி வரும் அவர், பார்படாஸ் டிரைடெண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7-வது வரிசையில் களமிறங்கி, வெறும் 38 பந்துகளில் 68 ரன்கள் விளாசினார். இந்த அதிரடி ஆட்டத்தின் போது அவர் 9 பிரமாண்ட சிக்ஸர்களைப் பறக்கவிட்டார்.
இப்போட்டியில் ஜமைக்கா கிங்ஸ்மென் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த போதிலும், ரசல் அடித்த 9 சிக்ஸர்கள் அவரை வரலாற்றுப் புத்தகத்தில் இடம் பெறச் செய்துள்ளன. இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 800 சிக்ஸர்களைக் கடந்த உலகின் 3-வது பேட்ஸ்மேன் என்ற சாதனையை ஆண்ட்ரே ரசல் படைத்துள்ளார். இவருக்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிறிஸ் கெய்ல் மற்றும் கீரன் பொல்லார்ட் ஆகிய இருவர் மட்டுமே இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.
தற்போது 603 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஆண்ட்ரே ரஸில் மொத்தம் 801 சிக்ஸர்களை அடித்துள்ளார். கிறிஸ் கெய்ல் 463 போட்டிகளில் 1056 சிக்ஸர்களுடனும், கீரன் பொல்லார்ட் 746 போட்டிகளில் 1001 சிக்ஸர்களுடனும் முதல் இரண்டு இடங்களில் நீடிக்கின்றனர்.
டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இப்பட்டியலில் கிறிஸ் கெய்ல் 463 போட்டிகளில் 14562 ரன்களுடன் 1056 சிக்ஸர்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக கீரன் பொல்லார்ட் 746 போட்டிகளில் 14803 ரன்களுடன் 1001 சிக்ஸர்களை விளாசி இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.
மூன்றாவது இடத்தில் உள்ள ஆண்ட்ரே ரசல் 603 போட்டிகளில் 9852 ரன்களுடன் 801 சிக்ஸர்களைப் பதிவு செய்துள்ளார். இவர்களைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் மற்றொரு வீரரான நிக்கோலஸ் பூரன் 475 போட்டிகளில் 11201 ரன்களுடன் 776 சிக்ஸர்களுடனும், இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் 524 போட்டிகளில் 14834 ரன்களுடன் 650 சிக்ஸர்களுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
டி20 கிரிக்கெட்டில் 800 சிக்ஸர்கள் என்ற மைல்கல்லை எட்டுவதற்கு முன்பாக, ரசல் சிபிஎல் தொடரில் 2000 ரன்களையும் கடந்தார். இதன் மூலம் சிபிஎல் தொடரில் 2000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் முதல் வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் தன்வசப்படுத்தியுள்ளார்.
சிபிஎல் வரலாற்றில் இதுவரை 5 பந்துவீச்சாளர்கள் மட்டுமே 100-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர், அதேபோல் 15 பேட்ஸ்மேன்கள் மட்டுமே 2000-க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்துள்ளனர். ஆனால், இவ்விரண்டு பட்டியல்களிலும் இடம்பெற்றுள்ள ஒரே ஆல்-ரவுண்டர் ஆண்ட்ரே ரசல் மட்டுமே ஆவார்.
ஆண்ட்ரே ரசல் தனது சிபிஎல் தொடர் வரலாற்றில் இதுவரை மொத்தம் 118 போட்டிகளில் விளையாடி 2036 ரன்களைக் குவித்துள்ளார். இதில் 2 சதங்கள் மற்றும் 7 அரைசதங்கள் அடங்கும். சிபிஎல் போட்டிகளில் அவரது அதிகபட்ச ஸ்கோர் ஆட்டமிழக்காமல் 121 ரன்கள் ஆகும். மேலும் இந்தத் தொடரில் 169.66 என்ற மாபெரும் ஸ்டிரைக் ரேட்டுடன் 134 பவுண்டரிகளையும், 171 சிக்ஸர்களையும் அவர் விளாசியுள்ளார். பந்துவீச்சிலும் அசத்தியுள்ள ரசல், 102 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். அவரது சிறந்த பந்துவீச்சு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி 23 ரன்கள் கொடுத்தது ஆகும்.