அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா வழக்கு; ட்விஸ்ட் வைத்த இசக்கி சுப்பையா
அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா வழக்கு; ட்விஸ்ட் வைத்த இசக்கி சுப்பையா - மறுத்த நீதிபதிகள்
இடைத்தேர்தல் தொடர்பான வழக்கின் இறுதி தீர்ப்பு முடியும் வரை தன்னை அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினராக தொடர அனுமதிக்க வேண்டும் என இசக்கி சுப்பையா சார்பில் உயர் நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்படது.
Published : September 1, 2026 at 10:27 PM IST
சென்னை: ராஜினாமாவை வாபஸ் பெற கோரியும், எம்.எல்.ஏ.வாக மீண்டும் தொடரவும் அனுமதி கோரி முன்னாள் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா தாக்கல் செய்த கூடுதல் மனுவை விசாரணைக்கு ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்து விட்டது.
அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல், சத்தியபாமா, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர் விஜயபாஸ்கர், ஜெயக்குமார் உள்ளிடடோர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்தனர்.
இந்த நிலையில் அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ண மூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், "கொறடா உத்தவையும் மீறி தவெகவுக்கு ஆதரவு அளித்த அதிமுகவை சேர்ந்த 6 எம்எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருந்த போது, ராஜினாமாவை ஏற்றுக் கொண்டு சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் அமர்வு முன்பு விசாரித்து வரும் நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது அக்ரி கிருஷ்ணமூர்த்தி சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், "ராஜினாமா செய்த எம்எல்ஏக்களிடம், சுயமாக தான் ராஜினாமா செய்தார்களா? என விசாரணை செய்து, திருப்தி அடைந்த பின்னர்தான் அவர்கள் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக சபாநாயகர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த விசாரணை என்பது வெறும் சம்பிரதாயம் அல்ல, அரசியல் சாசன கடமை. விசாரணை அர்த்தமுள்ளதாக நடக்கவில்லை.
ராஜினாமா கொடுத்த சில மணி நேரங்களில் இவர்கள் தவெகவில் இணைந்துள்ளனர். இதை பற்றி விசாரிக்காமல், ராஜினாமாவை மட்டும் சபாநாயகர் ஏற்றுக்கொண்டுள்ளார். தகுதி நீக்க புகார் அளித்த அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு எந்த நோட்டீசும் அனுப்பப்படவில்லை. பேரம் நடந்துள்ளது குறித்து ஆளுநரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையின் போது, தனது ராஜினாமாவை திரும்ப பெறுவதாக ராஜினாமா செய்த சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக, இடைத்தேர்தல் தொடர்பான வழக்கின் இறுதி தீர்ப்பு முடியும் வரை தன்னை அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினராக தொடர அனுமதிக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக சபாநாயகரிடம் ஆகஸ்ட் 28-ஆம் தேதி கடிதம் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக கூடுதல் மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் நீதிபதிகளிடம் இசக்கி சுப்பையா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே இந்த கூடுதல் மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என தலைமை நீதிபதி அமர்வு மறுத்து தெரிவித்தது. மேலும், ராஜினாமாவை ஏற்ற உத்தரவை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.