அமைச்சருக்கு சபாநாயகர் அறிவுரை
''த .வெ.க., - அ.தி.மு.க., உறவு குறித்து பேச வேண்டாம்,'' என, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு, சபாநாயகர் பிரபாகர் அறிவுரை வழங்கினார்.
சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, பூந்தமல்லி தொகுதி த.வெ..க., - எம்.எல்.ஏ., பிரகாசம், ''செவ்வாய்பேட்டை ரயில்வே மேம்பாலம் கிடப்பில் உள்ளது. அதை விரைந்து முடித்து தர வேண்டும்,'' என்றார்.
அப்போது சபாநாயகர் பிரபாகர், ''மூல கேள்விக்கு தொடர்பில்லாத கேள்வியாக இருந்தாலும், முதல் முறையாக கேள்வி கேட்டதால், அனுமதி வழங்கினேன். அதற்கு பதில் இருந்தால் அமைச்சர் கூறலாம்,'' என்றார்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எழுந்து, ''திருவள்ளூர் எங்கள் மாவட்டம். பத்துக்கு பத்து தொகுதிகள் ஜெயித்த மாவட்டம்,'' என்றபோது, திருத்தணி தொகுதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,அரி, இருக்கையில் அமர்ந்தபடி, ''ஒன்பது தொகுதிகள்,'' என்றார்.
அதை கவனித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ''பத்துக்கு ஒன்பது தொகுதிகள். அதனால் என்ன; அ.தி.மு.க.,வும் நம்முடையதுதானே. த.வெ.க.,வும், அ.தி.மு.க.,வும் ஒன்றுதானே,'' என்றார்.
அப்போது சபாநாயகர் குறுக்கிட்டு, ''அந்த உறவு குறித்து சபைக்கு தெரியாது; அதை நீங்கள் சொல்ல வேண்டாம்,'' என்றார்.