அடுத்த கட்ட தீவிர போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும்... செவிலியர்கள் எச்சரிக்கை
அடுத்த கட்ட தீவிர போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும்... செவிலியர்கள் எச்சரிக்கை
செவிலியர்களின் நீண்டகால கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக பரிசீலித்து, சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்.
தஞ்சாவூர்: கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் அடுத்த கட்ட தீவிர போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும் என்று செவிலியர்கள் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு நர்சுகள் மற்றும் ஒருங்கிணைந்த செவிலியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் செவிலியர்கள் மேற்கொண்டுள்ள போராட்டம் மூன்றாவது நாளையும் கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மூன்று நாட்களாக கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றி வரும் செவிலியர்கள், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று 6ம் தேதி முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு தினமும் ஒரு மணி நேரம் ஒரு மணி நேர குரல் முழக்கம்' என்ற பெயரில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
இந்த போராட்டம் மருத்துவ சேவைகள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாத வகையில் நடைபெறும் என்றும், நோயாளிகளுக்கான சிகிச்சை மற்றும் அவசர மருத்துவப் பணிகள் வழக்கம்போல தொடரும் என்றும் செவிலியர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். பணியின்போது ஒரு மணி நேரம் குரல் முழக்கம் எழுப்பி அரசின் கவனத்தை தங்கள் கோரிக்கைகள் மீது திருப்பும் நோக்கத்திலேயே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
செவிலியர்கள் முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கைகளில், தொகுப்பூதிய முறையில் பணியாற்றும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதே முதன்மையானதாகும். நீண்ட காலமாக தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் செவிலியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஏழு அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணிபுரியும் செவிலியர்களின் பணியிடங்களை ஆட்குறைப்பு செய்யும் வகையில் உள்ள அரசாணை எண் 204-ஐ ரத்து செய்து, செவிலியர் பற்றாக்குறை நிலவும் அரசு மருத்துவமனைகளில் புதிய காலிப்பணியிடங்களை உருவாக்கி நிரப்ப வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேபோல், செவிலியர் பதவியின் பெயரை மத்திய அரசைப் போல "நர்சிங் ஆபிசர்" என மாற்றுவது மட்டுமே செய்யக்கூடாது என்றும், அதனுடன் தொடர்புடைய பணப்பலன்கள், பதவி உயர்வு வாய்ப்புகள், உரிய பணிவர்ணனை (Nurses Job Description) உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி