“சாலமன் பாப்பையா விட்டுச் சென்றது நிரப்ப முடியாத வெற்றிடம்”
சென்னை: “இனி உங்களைப் போன்றதொரு மாமனிதரை நாங்கள் எங்கே போய் தேடுவோம்? நீங்கள் விட்டுச் சென்ற இந்த வடுவையும் வெற்றிடத்தையும் இனி யாரால் நிரப்ப முடியும்?” என்று மறைந்த பேராசிரியர் சாலமன் பாப்பையாவுக்கு உயர் நீதிமன்ற நீதிபதி ந.ஆனந்த் வெங்கடேஷ் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
‘தமிழை எளிய மனிதனுக்கும் எட்டிப்பிடிக்கும் தேனமுதாக மாற்றி, பட்டிமன்ற நாயகனாய் எங்கள் நெஞ்சங்களில் வீற்றிருந்த தமிழினத்தின் தந்தை போன்ற சாலமன் பாப்பையாவின் அடியொற்றி வடித்த கண்ணீர் அஞ்சலி’ எனக் குறிப்பிட்டு அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘தமிழ் இலக்கியத்தின் மீது என்னைப் போன்ற பாமரனுக்கும் பேரன்பும் காதலும் கொள்ள வைத்த எங்கள் தந்தையே. எங்களை அனாதையாக்கிவிட்டு எங்கே சென்றுவிட்டீர்கள்?
நீங்கள் தமிழ் இலக்கிய உலகின் மாபெரும் ஆளுமை என்பதைத் தாண்டி, மனிதருள் மாணிக்கமாய் விளங்கியதால் தான் உலகமெங்கும் வாழும் தமிழ் நெஞ்சங்கள் உங்களை தங்கள் வீட்டு மூத்த பிள்ளையாய், தந்தையாய் கொண்டாடின. இனி உங்களைப் போன்றதொரு மாமனிதரை நாங்கள் எங்கே போய் தேடுவோம்? நீங்கள் விட்டுச் சென்ற இந்த வடுவையும் வெற்றிடத்தையும் இனி யாரால் நிரப்ப முடியும்?
இறப்புக்கு சில நாட்களுக்கு முன்பு வரை பட்டிமன்ற நடுவராய் சிங்கமென கர்ஜித்துவிட்டு, நாங்கள் சற்றும் எதிர்பாராத தருணத்தில் எங்களை ஏங்கவிட்டுச் சென்றுவிட்டீர்களே. போகும் போது கூட எவ்வளவு மிடுக்கோடு சென்றீர்கள் ஐயா.
மேல் உலகத்தில் இறைவன் உங்களை வைத்து பட்டிமன்றங்கள் நடத்தத் திட்டமிட்டுவிட்டான் போலும். நாங்கள் உங்களை அன்னாந்து பார்த்து அசைபோடும் நேரத்திலெல்லாம் உங்களை எங்களிடமிருந்து அபகரித்துச் சென்றுவிட்டான்.
சந்தோஷமாக பட்டிமன்றங்களை அங்கே நடத்துங்கள் ஐயா. வள்ளுவனையும், கம்பனையும், இளங்கோவையும், பாரதியையும் அதில் கலந்து கொள்ளச் செய்து தேவலோகத்தையே கோலாகலமாக ஆக்குங்கள். முடிந்தால் அதனை பூலோகத்தில் இருக்கும் எங்களுக்கும் நேரடி ஒளிபரப்பு செய்ய இறைவனிடம் விண்ணப்பம் செய்துவிடுங்கள்.
ஐயா... உங்கள் துணைவியாரைப் பிரிந்து நீங்கள் எவ்வளவு தூரம் தனிமையில் தவித்தீர்கள் என்பதை நாங்கள் அறிவோம். வாழ்க்கையில் முதல்முறையாக உங்கள் சொந்த சந்தோஷத்துக்காக, உங்கள் அன்பு மனைவியுடன் மீண்டும் சேர வேண்டும் என்ற உங்கள் உள்ளாார்ந்த ஆசையை நிறைவேற்றிக் கொண்டுவிட்டீர்கள்.
நியாயமான ஆசைதானே ஐயா... எவ்வளவு காலம் தான் எங்களுக்காகவே வாழ்வீர்கள்? நீங்கள் அடைந்திருக்கும் இந்த அளவில்லா பேரானந்தத்தையும் சந்தோஷத்தையும் நினைத்துத் தான் என் மனம் சிறிது மன அமைதி அடைகிறது.
சந்தோஷமாக இருங்கள் ஐயா. தொடர்ந்து இறைவனின் உலகத்தில் பட்டிமன்றங்களை நடத்தி தினம் தினம் அங்கே கோலாகலமான சூழலை ஏற்படுத்துங்கள். நாங்களும் ஒரு நாள் அங்கே வந்து சேர்ந்து, எங்கள் அன்புக்குரிய சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றங்களை மீண்டும் தொடர்ந்து கண்டு மகிழ்வோம்.
இப்போதைக்கு, உங்களுக்காக அழுது புலம்பிக்கொண்டிருக்கும் எனக்கு ஒரு காவல் தேவதையாக (Guardian Angel) இருந்து, இந்த உலகில் ஒரு நல்ல மனிதனாக வாழ அருள்பூரியுங்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.