📅 Friday, 04 September 2026 IST | ஆவணி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 04, 2026 02:03 AM

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தனித் தீர்மானம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தனித் தீர்மானம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தனித் தீர்மானம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை அங்கீகரிக்கக் கோரி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் வரலாற்று சிறப்புமிக்க தனித் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். சட்டப்பேரவையில் தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதலமைச்சர் விஜய், "தமிழ் வெறும் மொழியல்ல, அது நமது அடையாளம். மாவட்ட நீதிமன்றங்களில் தமிழ் பயன்பாட்டில் உள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்திலும் தமிழை முதன்மை மொழியாக அங்கீகரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். சாமானிய மக்களும் தங்கள் வழக்கில் என்ன நடக்கிறது என்பதைத் தாய்மொழியில் அறிய வேண்டும்; நீதியின் மொழி மக்களுக்குப் புரியும் மொழியாக இருக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.

அரசியலமைப்பு

மாநில ஆளுநர், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் மாநில ஆட்சி மொழியை உயர்நீதிமன்ற நடவடிக்கைகளில் பயன்படுத்த அதிகாரம் வழங்க வழிவகை உள்ளது சுட்டிக்காட்டப்பட்டது.

கடந்த 2006 டிசம்பர் 6 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை உச்சநீதிமன்றம் ஏற்காததால் மத்திய அரசு மேல் நடவடிக்கை எடுக்கவில்லை.

தற்போது தொழில்நுட்பம் வளர்ந்துள்ள சூழலில், இக்கோரிக்கையை மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் மறுபரிசீலனை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்

இந்த தீர்மானம் எந்த மொழிக்கும் எதிரானதோ அல்லது ஆங்கிலத்தை அகற்றும் நோக்கமோ கொண்டது அல்ல எனக் தெளிவுபடுத்திய முதல்வர், பின்வரும் நடைமுறைகளை உருவாக்க வலியுறுத்தினார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாகவும், ஆங்கிலத்திற்கு சமமான வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும்.

மனுக்கள், ஆவணங்கள் மற்றும் வாதங்களைச் சமர்ப்பிக்க உரிய தமிழ் நடைமுறையை உருவாக்க வேண்டும்.

தீர்ப்புரைகள் மற்றும் உத்தரவுகளை அதிகாரப்பூர்வமாக தமிழில் வழங்கும் அமைப்பையும், அதற்கான பயிற்சிகளையும் ஏற்படுத்த வேண்டும்.

இத்தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு மத்திய அரசின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.